/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
சுடர்க்கொடி உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி!
/
சுடர்க்கொடி உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி!
UPDATED : மே 25, 2024 01:06 PM
ADDED : மே 24, 2024 11:22 PM

திருப்பூர் : அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முதன்முறை நடந்த உடல் உறுப்பு தானம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்பூர், வீரபாண்டியை சேர்ந்த சுடர்க்கொடி, 36 என்ற, பெண், விபத்தில் சிக்கி, தலையில் படுகாயமடைந்த நிலையில், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுய நினைவிழந்த நிலையில், சுடர்க்கொடிக்கு, மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்த டாக்டர்கள், அவரது கணவர் உட்பட உறவினர்களிடம் நிலைமையின் விபரீதத்தை விளக்கினர்.
செயற்கை சுவாசத்தின் உதவியுடன், 8 மணி நேரம் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை வழங்கியும் பலனில்லாமல் போக, மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். அவரது கணவர், மகள்கள், உறவினர்கள் கதறி அழுதனர். ஆற்ற இயலாத துயரிலும், சுடர்க்கொடியின், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர் அவர்களது உறவினர்கள்.
திருப்பூர், அரசு மருத்துவமனைக்கு இது, முதன்முறை என்பதால், அதற்கான செயல்பாடுகளில் மருத்துவர்கள், வேகமும், விவேகமும் காண்பித்தனர். ஏறத்தாழ, 5 மணி நேரம் நடந்த ஆபரேஷனில், அவரின் கண், நுரையீரல், கல்லீரல் ஆகியவை செயல்பாட்டில் இருந்த நிலையிலேயே பாதுகாப்பாக எடுக்கப்பட்டன.
உடல் உறுப்புகளை ஆம்புலன்சில் எடுத்து செல்ல, போலீஸ் வாகனம் 'சைரன்' ஒலித்த படி தொடர்ந்தது. சுடர்க்கொடியின் சடலத்துக்கு, மருத்துவமனை டீன் முருகேசன், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த, ஒட்டு மொத்த மருத்துவ அதிகாரிகளும், ஊழியர்களும் அணிவகுத்து நின்று, அஞ்சலி செலுத்தினர்.
இந்த விஷயம் பரவ, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கையெடுத்து கும்பிட்டு, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

