PUBLISHED ON : பிப் 09, 2025 12:00 AM

மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம்: விருதுநகர் மாவட்டத்தில், பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. தொழிலாளர்கள் உயிரிழப்பதும், படுகாயங்கள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகளை கறாராக கடைப்பிடித்தால், விபத்துகள் நடப்பதை தடுக்க முடியும். அரசு நிர்வாகமும், ஆலை உரிமையாளர்களின் மெத்தன போக்கும் பட்டாசு விபத்துகள் நடப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
டவுட் தனபாலு: எந்த ஆட்சி நடந்தாலும், பட்டாசு ஆலை விபத்துகள் மட்டும் குறையவே இல்லை என்பதில், 'டவுட்'டே இல்லை... 'கை' நீட்டும் அதிகாரிகள் மீது அரசு கறாரா நடவடிக்கை எடுத்தாலே, இது போன்ற விபத்துகளை குறைக்க முடியும் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
நாம் தமிழர் கட்சி அறிவிப்பு: ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி, உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட வலியுறுத்தியும், பஞ்சமி நிலங்களை மீட்க வலியுறுத்தியும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. சென்னை போன்று ஏதேனும் ஒரு நகர் பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
டவுட் தனபாலு: இவரது பேரணிக்கு அனுமதி தந்துட்டு தான் போலீசார் மறுவேலை பார்ப்பாங்க... அது இருக்கட்டும்... நாம் தமிழர் கட்சியில இருந்து கொத்துக் கொத்தா பலரும் மாற்று கட்சிகளுக்கு ஓடிட்டு இருக்காங்களே... பேரணி நடத்துனா, கட்சியின் உண்மையான பலம் அம்பலமாகிடாதா என்ற, 'டவுட்' வருதே!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: சிவகங்கை மாவட்டம், சோமநாதபுரம் காவல் நிலையத்திற்குள், அத்துமீறி நுழைந்த வி.சி., கட்சியினர், அங்கிருந்த பெண் எஸ்.ஐ., மீது தாக்குதல் நடத்தியது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு, காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் வெட்கி தலைகுனிய வேண்டும். பெண் எஸ்.ஐ.,யை தாக்கிய வி.சி., கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டவுட் தனபாலு: போலீசாரை தாக்குவதே தவறு; அதுவும், போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து தாக்குவது அதனினும் தவறு; அதுவும், பெண் போலீசாரை தாக்குவது பெரும் தவறு... அப்படியிருக்கையில், 'ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்கிறோம்' என்ற மமதையால் தான், வி.சி., கட்சியினர் இந்த அராஜகத்தை அரங்கேற்றி இருக்காங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!

