PUBLISHED ON : பிப் 05, 2025 12:00 AM

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: 'காவிரி டெல்டா மாவட்டங்கள் தவிர, மீதமுள்ள மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யப்படும் அதிகாரம், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது' என, தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது, தமிழக விவசாயிகளுக்கு தி.மு.க., அரசு இழைக்கும் பெரும் துரோகம். மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, மாநில அரசின் உரிமைகளையும், விவசாயிகளின் நலன்களையும், மத்திய அரசிடம் தாரை வார்த்திருக்க கூடாது.
டவுட் தனபாலு: மத்திய பா.ஜ., அரசின் தே.ஜ., கூட்டணியில் தான் உங்க கட்சியும் இருக்குது... அப்படியிருந்தும், 'விவசாயிகள் நலன்களை மத்திய அரசிடம் தாரை வார்த்திருக்க கூடாது'ன்னு சொல்றதை பார்த்தால், தே.ஜ., கூட்டணிக்கு டாட்டா காட்ட தயாராகிட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
தமிழக முதல்வர் ஸ்டாலின்: ஈரோடு கிழக்கில், தி.மு.க.,வை நேரடியாக எதிர்க்கும் துணிவின்றி, சில உதிரிகளை துாண்டிவிட்டு, அ.தி.மு.க., - பா.ஜ., கட்சிகள் மறைமுக யுத்தம் நடத்தி பார்க்கின்றன. 2026 சட்டசபை தேர்தல் வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில், 'வெல்வோம் 200; படைப்போம் வரலாறு' என்பதற்கு முன்னோட்டமாக, ஈரோடு கிழக்கு தொகுதியில், தி.மு.க.,வின் வெற்றியை எதிர்நோக்குகிறேன்.
டவுட் தனபாலு: உதிரி பூக்கள் எல்லாம் சேர்ந்து தான் பெரிய மாலையாகும்... அந்த மாதிரி, உதிரி கட்சிகள் எல்லாம், உங்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்துட்டா, '2026ல், 200 தொகுதிகள்' என்ற உங்க எண்ணம் ஈடேறுவது, 'டவுட்'தான்!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி: 'தமிழ்நாட்டின் பெயர் கூட மத்திய அரசின் பட்ஜெட்டில் இல்லையே. இது ஓரவஞ்சனை. தமிழகத்தை மத்திய அரசு முழுமையாக புறக்கணித்திருக்கிறது' என, முதல்வர் ஸ்டாலின், சிறப்பான மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு எதிராக அங்கலாய்த்திருக்கிறார்.
டவுட் தனபாலு: 'வருஷத்துக்கு, 12 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குறவங்களுக்கு வருமான வரி இல்ல'ன்னு மத்திய பட்ஜெட்ல அறிவிச்சிருக்காங்களே... அது, தமிழகத்தில் இருக்கும் மக்களுக்கு பொருந்தாதுன்னு முதல்வர் தப்பா நினைச்சுட்டாரோ என்ற, 'டவுட்'தான் வருது!

