PUBLISHED ON : டிச 16, 2024 12:00 AM

பா.ம.க., கவுரவ தலைவர் மணி: 'பெஞ்சல்' புயல், வெள்ளத்தால் விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட வட மாவட்டங்கள் பாதித்துள்ளன. சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பரில் வெள்ளம் பாதித்தவர்களுக்கும், துாத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பாதித்தவர்களுக்கும் அரசு, 6,000 ரூபாய் நிவாரணம் வழங்கியது. ஆனால், வட மாவட்ட மக்களுக்கு மட்டும், 2,000 ரூபாய் வழங்குவது பாரபட்சம்.
டவுட் தனபாலு: இந்த வருஷம் ஏப்ரலில், லோக்சபா தேர்தல் நடந்துச்சே... அதுக்கு நாலு மாசங்கள் முன் புயல் அடிச்சதால, 6,000 ரூபாயை நிவாரணமா அள்ளி விட்டாங்க... தமிழக சட்டசபை தேர்தல், 2026 ஏப்ரலில் வருது... அதனால, 2025 டிசம்பர்ல வெள்ளம் வந்தால், 6,000 ரூபாய்க்கு மேல கூட தருவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., தலைவர் அன்புமணி: 'கிரீன் மேஜிக்' 1 லிட்டர் பால், 44 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், 'கிரீன் மேஜிக் பிளஸ்' 900 மி.லி., 50 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால், கிரீன் மேஜிக் பிளஸ் பாலின் விலை, லிட்டர், 55 ரூபாய். ஆவின் கிரீன் மேஜிக் பாலுடன், 'பிளஸ்' என்ற வார்த்தையை கூடுதலாக சேர்ப்பதற்காக, லிட்டருக்கு, 11 ரூபாய் அதிகம் வசூலிப்பது பகல் கொள்ளை; அப்பட்டமான மோசடி.
டவுட் தனபாலு: 'மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்; கங்கையே சூதகமானால் எங்கே போவது...' என்பது போல, தனியார் மோசடி செய்தால், அரசிடம் முறையிடலாம்... அரசே மோசடி செய்தால், யாரிடம் போய் அழுவது என்ற, 'டவுட்' தான் வருது!
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: மதுரை, அரிட்டாப்பட்டியில், 'டங்ஸ்டன்' இருப்பது குறித்த தகவலை, மத்திய அரசுக்கு தெரிவித்ததே, தி.மு.க., தான். ஆனால், இன்றைக்கு மக்கள் எதிர்ப்பு என்றதும், 'சுரங்கம் அமைவதற்கு விட மாட்டோம்' என, சட்டசபையில் எதிர்ப்பு தீர்மானம் போட்டுள்ளனர். இதுவரை மக்களை ஏமாற்றி வந்த, தி.மு.க.,வினர், இப்போது மத்திய அரசையும் ஏமாற்றுகின்றனர்.
டவுட் தனபாலு: அடடா... தமிழகத்தில் தொழில் வளத்தை பெருக்கலாம்னு நினைச்சிருப்பாங்க... அது, 'பூமராங்' மாதிரி எதிராக திரும்பியதும், பிளேட்டை திருப்பி போட்டுட்டாங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!

