'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

PUBLISHED ON : ஏப் 03, 2026 03:15 AM


Google News
Latest Tamil News
பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய தொழில்துறை அமைச்சர் பீயூஷ் கோயல்: த.வெ.க.,வுக்கு தமிழக அரசியல், மக்கள் குறித்து எந்த புரிந்துணர்வும் இல்லை. விஜய், முதல்வர் பதவி குறித்து கனவு காண்கிறார். அவருக்கு வரும் கூட்டம், ஓட்டுகளாக மாறாது. அவர் ஏற்கனவே தமிழக அரசியலில் இருந்த நடிகர்கள் விஜயகாந்த், கமல் போன்றோர் நிலையில் தான் இருப்பார். விஜய் கட்சி, அதிகபட்சமாக நான்கு சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற முடியாது.

டவுட் தனபாலு: விஜயின் செல்வாக்கு இவ்வளவு தான்னு இப்ப சொல்றீங்களே... அப்படியிருந்தும், அவரை தே.ஜ., கூட்டணியில் சேர்க்க, உங்க கட்சி தரப்பில் கடைசி வரை கடும் முயற்சிகளை எடுத்தது ஏன் என்ற, 'டவுட்' வருதே!

lll

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: தி.மு.க., ஆட்சியில், சொத்து வரி, மின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிப்பதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தி.மு.க., தேர்தல் அறிக்கையை வழக்கமாக, 'ஹீரோ, ஹீரோயின்' என கூறுவர்; ஆனால், இந்த முறை அது, 'ஹெராயின்' போன்று உள்ளது.

டவுட் தனபாலு: 'ஹெராயின்' பயங்கரமான போதை பொருள்... 'அதை பயன்படுத்தியவங்க, தன்னிலை மறந்துடுவாங்க'ன்னு மருத்துவர்கள் சொல்வாங்க... அந்த வகையில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளில் மக்களும் மயங்கி, அவங்களுக்கே ஓட்டு போட்டுட்டா, தே.ஜ., கூட்டணி வெற்றிக்கு சிக்கலாகிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll



உசிலம்பட்டி தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்து, ஓ.பன்னீர்செல்வத்துடன், தி.மு.க.,வில் இணைந்த அய்யப்பன்: கடைசி வரை கூடவே இருந்த எனக்கு பன்னீர்செல்வம் கை கொடுப்பார் என நம்பினேன். தி.மு.க.,வில் இணையும் போது உசிலம்பட்டி தொகுதியில் மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என, கேட்டேன்; அவரும் சம்மதித்தார். எம்.எல்.ஏ.,வாக இருந்து, தி.மு.க.,வில் இணைந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு மீண்டும் சீட் கொடுத்துள்ளனர். ஆனால், எனக்கு சீட் தராமல், காங்கிரசுக்கு உசிலம்பட்டி ஒதுக்கப்பட்டது. ஒரு கேப்டனாக, தொண்டனை கரை சேர்க்க, பன்னீர்செல்வம் தவறி விட்டார்.

- டவுட் தனபாலு: மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் எல்லாம், பன்னீருக்கு முன்னாடியே தி.மு.க.,வுக்கு போய் தொகுதிகளை முன்பதிவு பண்ணிட்டாங்க... நீங்க பன்னீரோடு பந்தாவா போய் சேர்ந்தது தான், உங்க சீட் கனவுக்கு வேட்டு வச்சிடுச்சு என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll