PUBLISHED ON : மார் 16, 2026 01:44 AM

த.வெ.க., இணை பொதுச்செயலர் நிர்மல்குமார்: தொகுதி பங்கீட்டில் நீண்ட இழுபறிக்கு பின், தி.மு.க.,வுடன், காங்., கூட்டணி தொடர்கிறது. ஆனால், காங்., தலைவர்களை மிக கேவலமாகவும், அவதுாறாகவும் அமைச்சர் ராஜ கண்ணப்பன், தளபதி எம்.எல்.ஏ., போன்றோர் பேசினர். அவர்களை, தி.மு.க., தலைமை கண்டிக்கக்கூட இல்லை. இதை பொறுத்து கொண்டு தான், காங்கிரசார், தி.மு.க., கூட்டணியில் தொடர்கின்றனர்.
டவுட் தனபாலு: அது சரி... உங்களை நம்பி கூட்டணிக்கு வந்திருந்தால், 'சீட்'களை தாராளமா வாரி வழங்குவீங்க... தேர்தல் செலவுக்கு பணம் தருவீங்களா... ஆனா, ஆளுங்கட்சியான, தி.மு.க., சீட்களுடன், காங்., வேட்பாளர்களது தேர்தல் செலவுகளையும் ஏத்துக்கும் என்பதால் தான், அங்கயே நீடிக்கிறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
த.வெ.க., தேர்தல் மேலாண்மை பொதுச்செயலர், ஆதவ் அர்ஜுனா: எம்.ஜி.ஆருக்கு பின், அரசியலுக்கு வரவிருந்த நடிகர் ரஜினி, தி.மு.க., மிரட்டலுக்கு பயந்து, தி.மு.க., குடும்ப நிறுவனமான, 'ரெட் ஜெயன்ட்' படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். தனித்து போட்டியிட்டு வந்த, ம.தி.மு.க.,வுக்கு, தி.மு.க., கூட்டணியில், நான்கு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. மாற்றத்தை கொண்டு வருவோம் என கூறிய கமலும், மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வமும், தி.மு.க., பக்கம் போய் விட்டனர். சட்டசபை தேர்தலில், த.வெ.க., தனித்து தான் போட்டியிடும். அதற்காக, 234 தொகுதிகளின் வேட்பாளர்களையும் தயார் செய்து விட்டோம்.
டவுட் தனபாலு: தி.மு.க.,வுக்கு மாற்றாக கட்சி துவங்க எண்ணிய, துவங்கிய எல்லாரும் கடைசியில், தி.மு.க., முகாம்லயே தஞ்சம் அடைஞ்சிட்டாங்கன்னு நீங்களே சொல்றீங்க... அந்த வகையில், எதிர்காலத்தில் உங்க கட்சியும், தி.மு.க., அணியில் சேர்ந்துடுமோ என்ற, 'டவுட்' தான் வருது !
பத்திரிகை செய்தி: தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி., பதவி எதிர்பார்த்து கிடைக்காததால், சட்டசபை தேர்தலில், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
டவுட் தனபாலு: 'ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது'ன்னு சொல்வாங்க... ஏதாவது, ஒரு சபையில் மைக்கை பிடிச்சு, பேசியே பழகிட்ட வைகோவால், இப்ப பதவியில்லாம இருக்க முடியலை என்பதும், அதனாலயே, சட்டசபைக்கு போட்டியிட முடிவு செஞ்சிருக்கார் என்பதும், 'டவுட்'டே இல்லாம தெரியுது!

