PUBLISHED ON : டிச 28, 2025 03:26 AM

நடிகையும், தமிழக பா.ஜ., கலை, கலாசார பிரிவு மாநில செயலருமான கஸ்துாரி: விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல முடியாத முதல்வர் ஸ்டாலின், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கிறிஸ்துமஸ் மரத்துடன் செல்கிறார்; ரம்ஜான் விழாவில் நோன்பு கஞ்சி குடிக்கிறார். அதை தவறு என சொல்லவில்லை. ஆனால், சகோதர மனப்பான்மையுடன் ஹிந்து விழாக்களுக்கு வருவதை முதல்வர் தவிர்ப்பது சரியல்ல.
டவுட் தனபாலு: 'தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை எல்லாம், மூடநம்பிக்கையுள்ள ஹிந்துக்கள் கொண்டாடுவது' என்பது தானே முதல்வரின் கருத்து... வீட்டுக்குள்ளேயே மத்தாப்பு கொளுத்தி, கொழுக்கட்டை சாப்பிட்டு, பச்சை மை பேனாவுக்கு பூஜை போடுவதெல்லாம் நடக்குதோன்னு, பொதுமக்கள் அனைவருக்குமே, 'டவுட்' தானே!
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: சட்டசபை தேர்தலை சந்திக்க, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தயாராக உள்ளது. 'தி.மு.க., -- த.வெ.க., இடையே தான் போட்டி' என விஜய் கூறுகிறார். ஆனால், தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் என்பது தான், தே.ஜ., கூட்டணி மற்றும் விஜய் நிலைப்பாடு. விஜய் தனியாக நின்றால், அதை செய்ய முடியுமா என்று யோசிக்க வேண்டும். விஜய் தனியாக நிற்பதை விட, அனைவரும் இணைந்து நின்றால், வெற்றி இன்னும் சுலபமாக இருக்கும்.
டவுட் தனபாலு: விஜய் தனியாக நின்றால், தி.மு.க., கூட்டணியே மீண்டும் ஜெயிக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் நிபுணர்கள் எல்லாம் சொல்றாங்க... அதனால, 'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு விஜய் வந்தால் தான், நம்மால ஜெயிக்க முடியும்'னு சொல்லாம, நாசுக்கா அழைப்பு விடுத்து, உங்க கெத்தை காட்டுவது, 'டவுட்' இல்லாம தெரியுது!
துாத்துக்குடி தி.மு.க., -- எம்.பி., கனிமொழி: தற்போது நடப்பது, பெண்களுக்கான ஆட்சி. பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டத்துடன் தான், தி.மு.க., ஆட்சியே துவங்கியது. தமிழகத்தில் மதுக் கடைகளை படிப்படியாக குறைத்துக் கொண்டு தான் வந்துள்ளோம். மதுக் கடைகளை மேலும் குறைப்பதற்கு நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
டவுட் தனபாலு: சும்மா பேருக்கு சில மதுக் கடைகளை மட்டும் மூடிட்டு, தம்பட்டம் அடிக்கக் கூடாது... தி.மு.க., 2021ல் ஆட்சிக்கு வந்தப்ப, தமிழகத்தின் மது விற்பனை எத்தனை ஆயிரம் கோடி, இப்ப எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் என்ற புள்ளி விபரங்களை கணக்கு போட்டு பார்த்தாலே, உங்களது கடையடைப்பு வண்டவாளம் வெளிப்பட்டு விடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

