PUBLISHED ON : டிச 24, 2025 04:16 AM

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும், 234 வேட்பாளர்களையும், வரும் பிப்., 21ல் திருச்சியில் நடக்கும் மாநாட்டில் அறிவிப்போம். அனைவரும் இளைஞர்கள் தான். தேர்தலில் சமரசம் இல்லை; கூட்டணியும் கிடையாது. சாப்பாட்டில் மட்டும் தான் கூட்டு, பொரியல் எல்லாம். சண்டை எல்லாம் தனித்து தான் போடுவோம்.
டவுட் தனபாலு: ஆனா, எந்த சண்டையிலும், அதாவது தேர்தலில், நீங்க ஜெயிச்ச மாதிரி தெரியலையே... 'கைப்புள்ள' வடிவேலு கணக்கா, எல்லா தேர்தல்களிலும் தோற்று போய், சட்டை கிழிஞ்சு தானே திரும்புறீங்க... வர்ற தேர்தல்லயாவது அந்த நிலை மாறுமா அல்லது 2029 லோக்சபா தேர்தலுக்கும் இதே, 'டயலாக்'கை சொல்வீங்களா என்ற, 'டவுட்' வருதே!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: தி.மு.க., தலைவராக கருணாநிதி இருந்தபோது, அக்கூட்டணியில் நாங்கள் இருந்தாலும், இலங்கை தமிழர்கள் பிரச்னையில், அ.தி.மு.க., மற்றும் பிற தலைவர்களுடன் இணைந்து போராடினோம். எங்களுக்கு பதவி பெரிதல்ல; 10 சீட்கள் கூடுதலாக வாங்கினால், புரட்சிகர மாற்றம் ஏற்படப் போவதில்லை. விமர்சனங்களை தாண்டி, தி.மு.க., கூட்டணியில் நீடிக்க காரணம், எங்களுக்கு பதவி, பொருள் ஆசை இல்லை என்பது தான்.
டவுட் தனபாலு: 'பதவி, பொருள் ஆசை இல்லை'ன்னு சத்தமா சொல்லாதீங்க... தேர்தலுக்கு சீட்களையும் தந்து, செலவுக்கு பல கோடி ரூபாய் நோட்டுகளையும் தரும் தி.மு.க., தலைமை, சீட்களை மட்டும் கொடுத்துட்டு, 'கல்லா பெட்டி'யை மூடிட்டு போயிட்டா, உங்க கட்சி வேட்பாளர்கள் பாடு திண்டாட்டமாகிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்: தமிழக ஊராட்சிகளில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் வினியோகிப்பவர், துாய்மை காவலர், சுகாதார உதவியாளர் என, அடிப்படை பணிகளை செய்வோருக்கு, மாதம், 2,000 ரூபாய் மட்டுமே தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம், 10,000 ரூபாயாக உயர்த்துமாறு அவர்கள் விடுத்த கோரிக்கையை, தி.மு.க., அரசு கண்டு கொள்ளவில்லை.
டவுட் தனபாலு: நீங்க குறிப்பிடும் பணியாளர்கள் எல்லாம், தி.மு.க., ஆட்சிக்கு முன்னாடி நடந்த உங்க அ.தி.மு.க., ஆட்சியிலும் இதே பணியில் இருந்து, இதே சம்பளத்தை தானே வாங்கினாங்க... அப்பவே, அவங்க சம்பளத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்ற, 'டவுட்' வருதே!

