PUBLISHED ON : செப் 20, 2025 12:00 AM

பா.ம.க., தலைவர் அன்புமணி: வன்னியர்களுக்கு, 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க, தி.மு.க., அரசு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை. இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் தான், சிறை நிரப்பும் போராட்டம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறோம். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தி.மு.க., அரசை கண்டித்து, வரும் டிசம்பர் 17ம் தேதி மாவட் டங்கள் வாரியாக, சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.
டவுட் தனபாலு: தமிழகத்தில் இருக்கும் மத்திய சிறைகள், கிளை சிறைகள்னு எல்லாத்தையும் அங்குலம் அளவு கூட இடமில்லாம நிரப்பிடுங்க... அப்ப தான், உங்க வசம் இருக்கும் பா.ம.க.,வின் பலம் மற்ற கட்சிகளுக்கு தெரியவரும்... கூட்டணியில் உங்க கட்சிக்கு அதிக சீட்களையும் ஒதுக்குவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
*************
பத்திரிகை செய்தி: த.வெ.க.,வில், 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கென பிரத்யேகமாக, மொபைல் போன் செயலி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த, அக்கட்சி தலைவர் விஜய் உத்தரவிட்டு உள்ளார். இதற்காக, 234 தொகுதிகளுக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இது மட்டுமின்றி, ஒரு தொகுதிக்கு ஆறு இணை ஒருங்கிணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
டவுட் தனபாலு: கட்சியில் இருக்கும் அத்தனை பேருக்கும் பதவி தரணும்னு விஜய் முடிவு பண்ணிட்டாரோ என்ற, 'டவுட்'தான் வருது... எல்லாருக்கும் பதவிகளை வாரி வழங்கிட்டா, தேர்தல் வேலைகளை பார்க்க ஆட்கள் வேணும்கிறதால தான், 2 கோடி தொண்டர்களை சேர்க்க சொல்றாரோ என்ற, 'டவுட்'டும் கூடவே வருது!
*************
பத் திரிகை செய்தி: வரும் சட்ட சபை தேர்தலுக்கு, நடிகர் விஜயுடன் கூட்டணி சேர தினகரன் பேச்சு நடத்தி வருகிறார். அ.ம.மு.க., தரப்பில், 60 தொகுதிகள் கேட்கப்பட்டதுடன், தேர்தல் செலவு குறித்தும் பேசப்பட்டுள்ளது. த.வெ.க., தரப்பில் தென் மாவட்டங்களில், 25 தொகுதிகள் வரை தருவதாக உறுதியளிக்கப்பட்டு உள்ளது.
டவுட் தனபாலு: அது சரி... 25 தொகுதிகள் தரும் அளவுக்கு தினகரன் கட்சி அமைப்பு ரீதியா பலமா இருக்குதா என்ற, 'டவுட்' வருதே... அதே நேரம், 'ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை' என்பது மாதிரி, கூட்டணிக்கு வாராது வரும் மாமணியான தினகரனை இழக்க வேண்டாம்னு, 25 தொகுதிகளை அள்ளிக் கொடுக்க விஜய் ஒப்புக்கொண்டாரா என்ற, 'டவுட்'டும் சேர்ந்தே வருது!