PUBLISHED ON : செப் 14, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: 'மக்கள் நலனுக்காக பெட்ரோல் விலை லிட்டருக்கு, ௫ ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு, ௪ ரூபாய் குறைக்கப்படும்' என, வாக்குறுதி அளித்த தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கடந்தும், அதை பற்றி வாய் திறக்காமல் தப்பித்து கொண்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்காமல், விலைவாசியை மட்டும் உயர்த்தி, மக்களை வதைப்பது தான் திராவிட மாடலா?
டவுட் தனபாலு: என்னமோ, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு வாக்குறுதியை மட்டும் தான் தி.மு.க., அரசு நிறைவேற்றாம விட்டது போல் பேசுறாரே... மற்ற வாக்குறுதிகளின் கதியை பற்றி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் கேட்டால், வண்டி, வண்டியா புகார் வாசிப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: வேலுாரில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பங்கேற்ற பெண்கள், அமைச்சர் துரைமுருகனை முற்றுகையிட்டு, தங்களது பகுதியில் சாக்கடை கால்வாய், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிர்ச்சி அடைந்த துரை முருகன், 'இதையெல்லாம் செய்து தர வேண்டியது மேயர் தான்; அவரிடம் கேளுங்கள்' என, மேயரை கைகாட்டி விட்டார். இதையடுத்து, மேயர் சுஜாதாவை மக்கள் முற்றுகையிட்டனர்.
டவுட் தனபாலு: அடுத்தவங்களை, 'கோர்த்து' விடுறதுல, துரைமுருகனுக்கு நிகர் அவர் தான்... ஆனா, அடுத்து சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக துரைமுருகன் ஓட்டு கேட்டு போறப்ப, அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் முற்றுகையிட்டா, இப்படி யாரையும் கைகாட்டிட்டு அவர் தப்பிக்க முடியாது என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: மக்களின் வாழ்க்கைக்காக கட்சி நடத்தும் நாங்கள் அடுத்ததாக, மலைகளை பாதுகாப்பதற்காக, மலைகளின் மாநாட்டை தர்மபுரியிலும், கடல் பாதுகாப்புக்காக கடல் மாநாட்டை துாத்துக்குடியிலும், தண்ணீர் பாதுகாப்பை வலியுறுத்தி, தண்ணீர் மாநாட்டை தஞ்சையிலும் நடத்த போகிறோம். ஐம்பூதங்கள் இல்லாமல், பூமியில் எந்த உயிரினங்களும் இருக்காது.
டவுட் தனபாலு: பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன், 'அவதார்' என்ற படத்தை, நீர், நிலம், காற்று, நெருப்புன்னு பார்ட் பார்ட்டா பல ஆயிரம் கோடி ரூபாய் செலவுல எடுத்துட்டு இருக்கார்... அவரை, 'காப்பி' அடிச்சு தான், இவரும் பஞ்ச பூதங்கள் மாநாட்டை நடத்துறாரோ என்ற, 'டவுட்' தான் வருது!