PUBLISHED ON : செப் 13, 2025 12:00 AM

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியால், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை, பா.ஜ.,வின் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் என்ன துணிச்சலில் சந்தித்தனர்? கூட்டணி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரை அழைத்து பேசினால், அ.தி.மு.க.,வை பற்றி மக்கள் என்ன நினைப்ப ர். இதற்கு மேலும் பா.ஜ.,வுடன் தான் கூட்டணி என்றால், அதற்கு அ.தி.மு.க., தொண்டர்களே பதிலளிப்பர்.
டவுட் தனபாலு: 'அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல், -'லெட்டர் பேடு' கட்சிகள் வரை அத்தனை பேரும், யார், யாரைச் சந்திக்கணும்னு இனிமே திருமாவளவனைக் கேட்டுக் கு கங்ப்பா...' எனச் சொன்னால், நீங்க, 'டவுட்' இல்லாம சந்தோஷப்படுவீங்களோ...!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: அ.தி.மு.க.,வில் உள்ளவர்களில், ஒரே ஒரு நபர் மற்றும் அவரை சேர்ந்த ஒரு சிலரை தவிர, மற்ற யார் மீதும் கோபமோ, வருத்தமோ கிடையாது. நான் யாரை சொல்கிறேன் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒருவரை அ.தி.மு.க., சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் பட்சத்தில், எங்களுக்கு மீண்டும் தே.ஜ., கூட்டணியில் இணைவதில் பிரச்னை இல்லை.
டவுட் தனபாலு: அ.தி.மு.க.,வுல சேர்க்காம இருக்கும்போதே இப்படி நிபந்தனை விதிக்கிறீங்களே... தப்பி தவறி உங்களை உள்ளே சேர்த்துட்டா, பழனிசாமியின் அரசியல் வாழ்வுக்கு முடிவுரையே எழுதிடுவீங்க என்பதில், 'டவுட்' இல்லை... அதனால் தான், உங்களை சேர்க்க முடியாதுன்னு பழனிசாமியும் உடும்பு பிடியா இருக்காரு என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம்: 'பழனி சாமியை தவிர முதல்வர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும், மீண்டும் தே.ஜ., கூட்டணிக்கு வருவேன்' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கூறியது ஆழமான கருத்து. என்னை பொறுத்த வரை கட்சி ஒன்றிணைவதற்கு எந்தவித, 'டிமாண்டும்' வைக்கவில்லை. அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை. எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
டவுட் தனபாலு: அது சரி... 'டிமாண்ட்' வைக்கிற இடத்திலா நீங்க இருக்கீங்க... அ.தி.மு.க.,வுல உங்களை சேர்த்துக்கிட்டாலே போதும் என்ற மனநிலையில் தானே இருக்கீங்க... அதே நேரம், தனக்கு முதல்வர் பதவி தந்த சசிகலாவையே சேர்க்க மறுக்கும் பழனிசாமி, உங்களை எல்லாம் சேர்ப்பது, 'டவுட்'தான்!