PUBLISHED ON : செப் 11, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, இதுவரை, 100க்கும் அதிகமான சட்டசபை தொகுதிகளில் பிரசாரத்தை முடித்து விட்டார். அவருக்கு மக்கள் அதிகம் கூடுகின்றனர். தி.மு.க., ஆட்சி மீதான எதிர்ப்பின் பிரதிபலிப்பே அது. இந்த பிரசார கூட்டத்துக்கு, கூட்டணி கட்சியினரும் அதிக ஆர்வத்துடன் வருகின்றனர். குறிப்பாக, அ.தி.மு.க., கொடிகளை விட, பா.ஜ., கொடிகள் அதிகம் உள்ளன.
டவுட் தனபாலு: தமிழகத்தை பலமுறை ஆண்ட கட்சி... ஆளும் தி.மு.க.,வை விட ஓட்டு வங்கி அதிகம் உள்ள அ.தி.மு.க.,வின் கொடிகளை விட, கூட்டணி கட்சியான பா.ஜ.,வின் கொடிகள் அதிகம் இருப்பதாக சொல்வது, உங்க கட்சியின் பெருமையை குறைக்காதா என்ற, 'டவுட்'தான் வருது.
ம.தி.மு.க.,வில் இருந்து நீக்கப் பட்ட மல்லை சத்யா: ம.தி.மு.க., வில், 32 ஆண்டுகளாக எங்கள் உழைப்பை உறிஞ்சிவிட்டு, சக்கையாக துாக்கி எறிந்து விட்டனர். நான் அளித்த விளக்கத்தை, ஒழுங்கு நடவடிக்கை குழு ஆய்வு செய்ததாக வைகோ கூறுகிறார். ஆனால், ம.தி.மு.க.,வில் ஒழுங்கு நடவடிக்கை குழுவே கிடையாது. முதல்வர் ஸ்டாலின், வெளிநாடு சென்று திரும்பிய நாளில், என்னை கட்சியில் இருந்து நீக்கி, அந்த செய்தியை பெரிதாக்கி, முதல்வர் பற்றிய செய்திகளை வைகோ மழுங்கடித்துள்ளார்.
டவுட் தனபாலு: அடடா... முதல்வரின் செய்தியை மழுங்க அடிக்கும் அளவுக்கு ம.தி.மு.க., பெரிய கட்சியும் இல்லை; தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தும் அளவுக்கு நீங்க பெரிய தலைவரும் இல்லை... உங்களை நீக்கியது, தமிழக அரசியலில் சின்ன சலசலப்பை கூட ஏற்படுத்தலை என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை!
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. ஆனால், 2026ல் ஆட்சியை கைப்பற்றும் வலிமை பா.ஜ.,வுக்கு இல்லை; அதனாலேயே கூட்டணி சேர்ந்தோம். கட்சிக்கு எது நல்லதோ, அதை செய்ய வேண்டும். அப்படித்தான் தலைமை மாற்றம் நிகழ்ந்தது. எனக்கும், அ.தி.மு.க.,வுக்கும் உரசல் இருந்தது. நான் என்னவெல்லாம் செய்தேனோ, அவை அனைத்தும் பா.ஜ., வளர்ச்சிக்காகவே. என் கட்சிக்காக பேசினேனே தவிர, மற்றவர்களை அவமதிக்கும் நோக்கமில்லை.
டவுட் தனபாலு: நீங்க சொல்வது நுாற்றுக்கு நுாறு உண்மை... கட்சிக்கு எது நன்மையோ, அதை மட்டுமே சிந்திக்கிறவர் தான் நல்ல தலைவராக முடியும்... அந்த வகையில, தமிழக பா.ஜ., வரலாற்றில் நீங்க சிறந்த தலைவராகவே இருந்தீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!