PUBLISHED ON : மே 01, 2025 12:00 AM

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்: துணைவேந்தர்கள் மாநாட்டை கூட்டும் அதிகாரம், கவர்னருக்கு இல்லை என்ற விபரம் அனைத்து துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுக்கும் தெரியும். அதனால்தான், அவர்கள் யாரும் ஊட்டி மாநாட்டுக்கு செல்லாமல் இருந்து விட்டனர். ஆனால், 'முதல்வர் மிரட்டியதால், துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முடியாமல் போனது' என, கவர்னர் அவதுாறு பரப்புகிறார்.
டவுட் தனபாலு: கவர்னருக்கும், உங்களுக்கும் நடக்கும் பஞ்சாயத்தில், துணைவேந்தர்கள் பாடுதான் திண்டாட்டமா இருக்கு... இந்த வேகாத வெயில்ல, அரசு செலவில் ரெண்டு நாள் ஊட்டிக்கு போயிட்டு வரலாம் என்ற அவங்க கனவில் மண் அள்ளிப் போட்டுட்டீங்க என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை!
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி விட்டது. பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சரே, தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டிருக்கிறார். இங்கு உள்நாட்டு அரசியலுக்கு எதிராகப் போராடும் திருமாவளவன், சீமான், சித்தராமையா, கம்யூ., கட்சிகள், பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசி வருவது கண்டிக்கத்தக்கது. நாட்டு மக்கள் பாதுகாப்பின்மீது இவர்களுக்கு அக்கறை இல்லை.
டவுட் தனபாலு: நம்ம நாடு எக்கேடு கெட்டால், அவங்களுக்கு என்ன...? அவங்களது ஓட்டு வங்கியின், 'பேலன்ஸ்' என்றைக்கும் நிரம்பி வழியணும்... அதனால, பாகிஸ்தான் அல்ல, தலிபான் பயங்கரவாதிகளுக்கு கூட அவங்க ஆதரவு தருவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: அ.தி.மு.க., ஆட்சியில், அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பு, பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் தண்டனை பெற்றதற்காக, பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை இழந்தது போன்றவற்றை, பழனிசாமி மறந்துவிட்டார். தன் ஆட்சியைக் காப்பாற்ற, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த பழனிசாமி, தி.மு.க., அமைச்சரவை மாற்றம் குறித்து பேசாமல் இருப்பது நல்லது.
டவுட் தனபாலு: 'எங்க ஆட்சியில் மட்டுமில்லை; உங்க ஆட்சியிலும் அமைச்சர்கள் பதவி இழந்திருக்காங்க' என்பது பொதுவான குற்றச்சாட்டா இருக்கே... 'எங்க கட்சியினர் மீது பொய் வழக்கு போட்டிருக்காங்க... அதை முறியடிச்சு, அவங்க சீக்கிரமே அமைச்சர்கள் ஆவாங்க'ன்னு சொல்ல தயங்குறாரே... இதன் மூலமா, அவங்க தப்பு செஞ்சது உண்மைதான் என்பதை ஒப்புக்கொள்கிறாரோ என்ற, 'டவுட்'தான் வருது!

