PUBLISHED ON : பிப் 24, 2024 12:00 AM

பா.ஜ., தேசிய தலைவர் நட்டா: முதல் முறை ஓட்டளிக்கும் வாக்காளர்களுக்கு ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன்... 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த அரசு, ஊழலிலும், வாரிசு அரசியலிலும் திளைத்தது; இப்போதைய அரசு, வளர்ச்சியை மட்டுமே இலக்காக வைத்து செயல்படுகிறது. நடக்க உள்ள லோக்சபா தேர்தல், ஊழல், வாரிசு அரசியலுக்கும், மறுபக்கம் வளர்ச்சிக்கும் இடையேயான போர்.
டவுட் தனபாலு: கண்டிப்பாக... 10 வருஷத்துக்கு முன்னாடி இருந்த இந்தியாவையும், இப்ப இருக்கிற இந்தியாவையும் ஒப்பிட்டு பார்க்கிறவங்க, மத்தியில யார் ஆட்சி அமைக்கணும்னு என்பதில் தெளிவான முடிவை எப்பவோ எடுத்துட்டாங்க... ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ஓட்டுப்பதிவு தேதியை எதிர்நோக்கி, ஆவலோட காத்துட்டு இருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: மத்திய அரசின், 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' என்ற ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மொத்தம் 4 கோடி பேர் வீடு கட்டியுள்ளனர்.அதற்கு தமிழகத்தில், 'கருணாநிதி கனவு இல்லம் திட்டம்' என்று பெயர் வைப்பது தவறு.
டவுட் தனபாலு: அ.தி.மு.க., ஆட்சியில கட்டிய கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கே கருணாநிதி பெயரை வச்சவங்க, மத்திய அரசு திட்டத்தை மட்டும் விட்டு வைப்பாங்களா,என்ன...? 'திட்டத்தின் பெயரை மாற்றினால், நிதி ஒதுக்கீடு ரத்தாகும்'னு ஒரு போடு போட்டு பார்த்தா, 'டவுட்' இல்லாம வழிக்கு வந்துடுவாங்க!
பத்திரிகை செய்தி: ம.தி.மு.க.,வில் இருக்கும் அதிருப்தியாளர்களை இழுக்க, அ.தி.மு.க., மாவட்டச் செயலர்களுக்கு, அக்கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி உத்தரவிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
டவுட் தனபாலு: அடப்பாவமே... ம.தி.மு.க.,வுல முக்கிய நிர்வாகிகளா இருக்கிறவங்களை இழுத்தாலே, பெருசா பிரயோஜனம் இருக்காது... இதுல, அந்த கட்சியில அதிருப்தியில இருக்கிறவங்களை இழுத்துட்டு வந்து, லோக்சபா தேர்தல்ல பழனிசாமிஎன்னத்த சாதிக்க பார்க்கிறார் என்ற, 'டவுட்'தான் வருது!

