PUBLISHED ON : செப் 16, 2024 12:00 AM

காங்., கட்சியை சேர்ந்த, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி: காங்., நிலைப்பாடு என்பது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடக் கூடியதுதான். கர்நாடகா காவிரியில் உரிய தண்ணீரை கொடுக்க மறுக்கிறது என்று சொல்லும் தமிழகம் மட்டும் எங்களுக்கு தேவையான தண்ணீரை கொடுக்கிறதா என்றால், இல்லை என்பதே பதில். எங்களுக்கு, காவிரியில் 9 டி.எம்.சி., தண்ணீரை கொடுக்க வேண்டும். ஆனால், 7 டி.எம்.சி., தண்ணீர் கூட தருவதில்லை. இதற்கு யாரை குறை சொல்வது?
டவுட் தனபாலு: கர்நாடகாவை எதிர்த்து, தமிழக அரசு சட்ட போராட்டங்களை நடத்துவது மாதிரி, நீங்களும் தமிழகத்தை எதிர்த்து போராட வேண்டியது தானே... உங்களை யாரு வந்து தடுத்தது என்ற, 'டவுட்' எழுதே!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: கூட்டணியில் இருந்து கொண்டே, மக்கள் பிரச்னைகளை பேசுகிற துணிச்சல் உள்ள இயக்கம் வி.சி., தான். படிப்படியாக, அரசு மதுபானக் கடைகளை மூடி, வரலாற்றில் நல்ல பெயர் எடுத்துக் கொள்ளுங்கள் என, வி.சி., வாழ்த்துகிறது. தி.மு.க., வரும் தேர்தலுக்குள் மதுபானக் கடைகளை மூடினால், எத்தனை விஜய் வந்தாலும், தி.மு.க.,வை அசைக்க முடியாது.
டவுட் தனபாலு: விஜயை எதுக்கு வீணா இழுக்குறார்... ஒருவேளை, 'மதுக்கடைகளை மூட தமிழக அரசு முன்வரலை என்றால், 2026 தேர்தலில் விஜய் அணியில் இடம் பிடிக்கவும், வி.சி., தயங்காது' என்பதை தான் நாசுக்கா சுட்டிக்காட்டுறாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
தமிழக காங்., பொதுச்செயலர் ரமேஷ்குமார்: காமராஜர் ஆட்சி காலத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது. திராவிட கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் தான் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. கருணாநிதி அதற்கு துவக்கப்புள்ளி வைத்தார். எம்.ஜி.ஆரும் அதை பின்தொடர்ந்தார்;
ஜெயலலிதா காலத்திலும் இது தொடர்ந்தது. காமராஜரின் மதுவிலக்கு கொள்கைக்கு உயிர் கொடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் காங்கிரசுக்கு இருக்கிறது.
டவுட் தனபாலு: உங்க கட்சியின் ஆட்சி நடக்கும் கர்நாடகா, ஹிமாச்சல பிரதேச மாநிலங்களிலும் காமராஜரின் மதுவிலக்கு கொள்கைக்கு உயிர் கொடுக்கணும்னு உங்க டில்லி தலைமையை வலியுறுத்தினால், 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!

