PUBLISHED ON : ஏப் 26, 2024 12:00 AM

முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு: அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அடிக்கடி கட்சி மாறுகின்றனர். இது ஒரு மோசமான போக்கு. இதை தடுக்க கட்சி தாவல் தடை சட்டத்தை வலுப்படுத்த வேண்டும். கட்சி மாற விரும்பினால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கட்சி மாற வேண்டும்.
டவுட் தனபாலு: நாடு முழுதும் காங்., உள்ளிட்ட மற்ற கட்சி தலைமைகளின் போக்கு பிடிக்காமல் நிறைய தலைவர்கள் பா.ஜ.,வில் சேர்ந்துட்டு இருக்காங்க... அதனால, கட்சி தாவல் சட்டத்தை வலுப்படுத்தினால், அதில் பாதிக்கப்படும் முதல் கட்சியாக பா.ஜ.,தான் இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்பட்சத்தில், கட்சியின் மாவட்ட செயலர்களை ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா அனுப்பி வைக்க, தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. விமான டிக்கெட், விசா எடுப்பதற்காக, சென்னை, பூந்தமல்லியில் உள்ள தனியார் ஏஜன்சியின் உதவி நாடப்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: தமிழகத்துல39 தொகுதிகள்லயும் தி.மு.க., கூட்டணி ஜெயிச்சிடும்னு அபார நம்பிக்கையோட தான் டூருக்கு பிளான் பண்றாங்களோ... நம் தேர்தல் பணிகள், தங்களை கரை சேர்க்கும்னு நினைக்கிறாங்களா அல்லது கடைசி நேரத்துல, நாம செய்த பட்டுவாடா பலன் அளிக்கும்னு நம்புறாங்களா என்பது தான், 'டவுட்!'
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: சசிகலா ஒரு வெற்று காகிதம். சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரது அத்தி யாயம், இந்த தேர்தலோடு முடிந்து விடும். கோவையில் ஒரு லட்சம் ஓட்டுகளை காணோம் என அண்ணாமலை கூறியிருப்பது, கிணற்றை காணவில்லை என்ற நடிகர் வடிவேல் காமெடி போன்றது.
டவுட் தனபாலு: உங்க வாதத்துக்கே வருவோம்... எழுதாத வெற்று காகிதத்துல தான், எத்தனையோ காவியங்களை படைக்க முடியும்... அதே மாதிரி, எந்த ஒரு அத்தியாயத்துக்கும் முடிவு என்பதே கிடையாது... முற்றுப்புள்ளி பக்கத்துல மேலும் இரண்டு புள்ளிகள் போட்டு, அடுத்தடுத்த அத்தியாயங்களை எழுதிட்டே போக முடியும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

