PUBLISHED ON : மே 21, 2026 12:00 AM

தமிழகத்தின் முன்னணி நாளிதழ்களில் ஒன்றாகத் திகழும் 'தினமலர்', கடந்த 75 ஆண்டுகளாக கல்வி துறையிலும் மாணவர் முன்னேற்றத்திலும் முக்கிய பங்காற்றி வருகிறது. ஒரு நாளிதழ், சமூக முன்னேற்றத்திற்கும் அறிவு வளர்ச்சிக்கும் வழிகாட்டும் சக்தியாகும் என்பதை தினமலர் தனது சேவையின் மூலம் நிரூபித்துள்ளது. அதன் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மாணவர்களின் வாழ்க்கையிலும் கல்வித்துறையிலும் தினமலர் ஏற்படுத்திய தாக்கத்தை பாராட்டுவது மிகவும் பொருத்தமானதாகும்.
மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய பழக்கங்களில் ஒன்று வாசிப்பு பழக்கம். நாட்டிலும் உலகிலும் நடைபெறும் நிகழ்வுகளை அறிந்து கொள்ள நாளிதழ் வாசிப்பு ஊதவுகிறது. பாடப்புத்தகங்களில் மட்டுமே அடங்கியிராத உலக அறிவை பெற தினமலர் ஒரு திறந்த ஜன்னலாக செயல்படுகிறது.
மாணவர்களின் மொழித்திறன் வளர்ச்சிக்கும் தினமலர் முக்கிய பங்களிப்பு செய்கிறது. நல்ல தமிழ் நடை, புதிய சொற்கள், செம்மையான இலக்கணம் கொண்ட செய்திகளையும் கட்டுரைகளையும் வாசிப்பதன் மூலம் மாணவர்களின் மொழிப்புலமை மேம்படுகிறது. பள்ளி பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, விவாதம் போன்றவற்றில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தேவையான சிந்தனைத் திறன் மற்றும் சொற்தொகை வளர்ச்சிக்கும் இது உதவுகிறது.
மேலும் தினமலரில் வெளியாகும் சிறப்புக் கட்டுரைகள், ஆசிரியர் கருத்துக்கள் மற்றும் சமூக பகுப்பாய்வுகள் மாணவர்களின் சிந்தனை வட்டாரத்தை விரிவுபடுத்துகின்றன. ஒரு விஷயத்தை ஆழமாக சிந்தித்து அணுகும் திறன், சமூகப் பொறுப்பு உணர்வு, விமர்சன பார்வை போன்ற பண்புகளை வளர்க்கும் ஆற்றல் தினமலரின் கட்டுரைகளுக்கு உண்டு. இதன் மூலம் மாணவர்கள் புத்தக அறிவைத் தாண்டி வாழ்க்கை அறிவையும் பெறுகின்றனர்.
கல்வி துறை செய்திகளை விரைவாகவும் தெளிவாகவும் வழங்குவதில் தினமலர் முன்னிலையில் உள்ளது. பள்ளி, கல்லூரி சேர்க்கைகள், தேர்வு அட்டவணைகள், அரசு கல்விக் கொள்கைகள், கல்வி உதவித்தொகைகள், புதிய கல்வித் திட்டங்கள் போன்ற தகவல்களை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உடனுக்குடன் வழங்கி வருகிறது. இத்தகைய தகவல்கள் மாணவர்களுக்கு தங்கள் கல்வி பயணத்தை திட்டமிட உதவுகின்றன.
மொத்தத்தில், தினமலர் ஒரு நாளிதழாக மட்டுமின்றி மாணவர்களின் அறிவை வளர்க்கும் ஆசானாகவும், கல்விக்கான வழிகாட்டியாகவும், எதிர்காலத்தை உருவாக்கும் துணையாகவும் திகழ்கிறது. கடந்த 75 ஆண்டுகளாக மாணவர்களின் கனவுகளுக்கு சிறகளித்து, கல்வி துறைக்கு உறுதுணையாக இருந்த தினமலர், வருங்காலத்திலும் பல தலைமுறைகளுக்கு அறிவொளி பரப்பும் என்ற நம்பிக்கை உறுதியானது.
தினமலர் கல்விக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் செய்த சேவைகள் மனமார்ந்த பாராட்டுகளுக்குரியவை. அறிவை விதைத்து, வெற்றியை அறுவடை செய்யும் தலைமுறைகளை உருவாக்கும் அதன் பணி என்றும் தொடரட்டும்.
ப. க. சுப்பிரமணியன்
முதல்வர், ப.வி. பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம், சென்னை
