PUBLISHED ON : ஏப் 09, 2025 12:00 AM

'திறமையானவர் தான்; ஆனால், பதவி கிடைக்குமா என தெரியவில்லையே...' என, முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் பற்றி கவலையுடன் கூறுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
ரவிசங்கர் பிரசாத், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்; சட்ட நிபுணர்; சிறந்த பேச்சாளர். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அவரது அரசில் மத்திய இணை அமைச்சராக பதவி வகித்தார்.
மோடி பிரதமரானதும், அவரது அரசிலும் தகவல் தொழில்நுட்பம், சட்டம் போன்ற முக்கிய துறைகளை கவனித்து வந்தார். ஆனால், 2021ல் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, எந்த காரணமும் இன்றி அவரது பதவி பறிக்கப்பட்டது.
ஆனாலும், தொடர்ந்து கட்சி பணியாற்றி வந்தார். கடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதும், மீண்டும் அமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்டது; அப்படி எதுவும் நடக்கவில்லை.
அடுத்த சில மாதங்களில் பீஹாரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக, இப்போதே கிராமம் கிராமமாகச் சென்று, மத்திய அரசின் திட்டங்களை விளக்கி, தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார், ரவிசங்கர் பிரசாத்.
'இந்த முறை பா.ஜ., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தால் கண்டிப்பாக ரவிசங்கர் பிரசாத், பீஹார் முதல்வராகி விடுவார்...' என, தகவல்கள் கசிகின்றன.
பா.ஜ.,வில் உள்ள மூத்த தலைவர்களோ, 'கண்டிப்பாக புது முகம் ஒருவருக்கு தான் முதல்வர் பதவி கிடைக்கும். அதையும் மீறி, ரவிசங்கர் பிரசாத்துக்கு நேரம் நன்றாக இருந்தால் பதவி கிடைக்கலாம்...' என்கின்றனர்.

