PUBLISHED ON : பிப் 15, 2024 12:00 AM

'இது என்ன புதிதாக இருக்கிறது...' என குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர், ஒடிசா மாநில பா.ஜ., தலைவர்கள். இங்கு முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது.
இந்த மாநிலத்தில், லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது. ஒடிசாவில், கடந்த 24 ஆண்டுகளாக நவீன் பட்நாயக் தான் முதல்வராக உள்ளார். இவருக்கு சவால் விடும் வகையிலான அரசியல் தலைவர்கள் யாரும் ஒடிசாவில் இல்லை.
நவீன் பட்நாயக்கின் சாதனையை இந்த தேர்தலில் எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்பதற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஒடிசாவில் உள்ள பா.ஜ., நிர்வாகிகள் கடுமையாக களப் பணியாற்றி வந்தனர். மாநில அரசை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் தான், சமீபத்தில் ஒடிசாவுக்கு வந்த பிரதமர் மோடி, நவீன் பட்நாயக்கை தன் நண்பர் என குறிப்பிட்டதுடன், அவரது நிர்வாகத்தையும் வெகுவாக பாராட்டினார். பதிலுக்கு பட்நாயக்கும், 'பிரதமர் மோடியின் வழிகாட்டுதலால், நாடு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது...' என, பாராட்டினார்.
இதனால் குழப்பம் அடைந்துள்ள ஒடிசா பா.ஜ., வினர், 'ஒருவேளை தேர்தல் நேரத்தில் பிஜு ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்க, பிரதமர் மோடி முடிவு செய்துள்ளாரோ. இப்போது என்ன செய்வது...' என, அமைதி காக்கின்றனர்.

