PUBLISHED ON : ஜூலை 14, 2025 12:00 AM

'எப்படியும் விரைவில் நல்ல தகவல் வரும்...' என, முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர், குலாம் நபி ஆசாத்; ஜம்மு - காஷ்மீர் முதல்வர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தவர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தனக்கு ஜனாதிபதி பதவி கிடைக்கும் என ரொம்பவே எதிர்பார்த்தார்; அப்படி எதுவும் நடக்கவில்லை.
இதனால் அதிருப்தியில் இருந்த அவர், 2002ல் காங்கிரசில் இருந்து வெளியேறினார். ஆசாத்தின் ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம் முடிவடைந்தபோது, பிரதமர் மோடி, இவரை வெகுவாக பாராட்டினார். இதனால், பா.ஜ.,விலிருந்து தனக்கு கவுரவமான பதவி தரப்படும் என எதிர்பார்த்து, ஏமாந்தார்.
இதையடுத்து, ஜனநாயக முன்னணி ஆசாத் என்ற அரசியல் கட்சியை துவக்கினார். 2024ல் நடந்த லோக்சபா தேர்தல், அதையடுத்து, ஜம்மு - காஷ்மீரில் நடந்த சட்டசபை தேர்தலில் தன் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தினார்; ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.
இதனால் சற்று காலம் அமைதியாக இருந்த ஆசாத், இப்போது, பா.ஜ.,வுக்கு மீண்டும் துாண்டில் போட்டு காத்திருக்கிறார். ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னர் அல்லது மத்திய அமைச்சர் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பதவி கிடைக்கும் என கூறி வருகிறார்.
அவரது ஆதரவாளர்களோ, 'காத்திருந்து... காத்திருந்து காலம் போனது தான் மிச்சம்...' என, விரக்தியுடன் கூறுகின்றனர்.

