PUBLISHED ON : செப் 11, 2025 12:00 AM

'அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தவர், மீண்டும் வந்து விட்டாரே...' என, ஒடிசா முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சி தலைவருமான நவீன் பட்நாயக்கின் வலதுகரமாக செயல்பட்ட, தமிழரான வி.கே.பாண்டியன் குறித்து பேசுகின்றனர், ஒடிசா அரசியல்வாதிகள்.
ஒடிசாவில் தொடர்ச்சி யாக, 24 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்த பெருமைக்குரியவர் நவீன் பட்நாயக். கடந்தாண்டு இங்கு நடந்த சட்டசபை தேர்தலில் இவரது கட்சி படுதோல்வி அடைந்து, ஆட்சியை பா.ஜ.,விடம் பறிகொடுத்தது.
இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக பலராலும் சுட்டிக்காட்டப் பட்டவர், விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாண்டியன். இவர், நவீன் பட்நாயக்கின் தனி செயலராக இருந்தார்.
கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது, பா.ஜ., தலைவர்கள் இவர் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். 'நவீன் பட்நாயக்கிடம் இருந்து, கட்சியை அபகரிக்க பாண்டியன் திட்டமிட்டுள்ளார்...' என, பா.ஜ., தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.
எதிர்பார்த்தது போலவே, சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் தோல்வி அடைந்தது. இதையடுத்து, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார், பாண்டியன்.
கடந்த ஓராண்டாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் இருந்த பாண்டியன், சமீப காலமாக மீண்டும் ஒடிசாவில் தலைகாட்டத் துவங்கியுள்ளார். இதைப் பார்த்த பா.ஜ.,வினர், 'பாண்டியன், அடுத்த ரவுண்டு அரசியலை துவங்கி விட்டார் போலிருக்கிறதே...' என, கிண்டல் அடிக்கின்றனர்.