PUBLISHED ON : நவ 28, 2025 12:00 AM

'இருந்தாலும், இவருக்கு இவ்வளவு குசும்பு ஆகாது...' என, உத்தர பிரதேச துணை முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான கேசவ் பிரசாத் மவுர்யா பற்றி கூறுகின்றனர், இங்குள்ள பிற கட்சி அரசியல்வாதிகள்.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக சமாஜ்வாதி உள்ளது. இந்த கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ், பீஹார் மாநிலம், பாட்னாவில் உள்ள விமான நிலையத்துக்கு கடந்த மாதம் வந்தபோது, உ.பி., துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யாவை அங்கு சந்தித்தார்.
அப்போது, மரியாதை நிமித்தமாக இருவரும் சிறிது நேரம் சிரித்துப் பேசிக்கொண்டனர். சமீபத்தில், இதுகுறித்து கேசவ் பிரசாத் மவுர்யாவிடம், பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, 'எனக்கு எப்போது இனிப்பு தருவீர்கள் என, அகிலேஷ் கேட்டார். பீஹார் தேர்தல் முடிவு வெளியானதும், நானே உங்களுக்கு இனிப்பு ஊட்டி விடுவேன் என, பதில் அளித்தேன்.
'பீஹார் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்ற தகவல் வெளியானதும், இனிப்பு கொடுப்பதற்காக அகிலேஷ் யாதவை தேடினேன்; அவரை காணவில்லை...' என்றார்.
இதையடுத்து, 'அடுத்த முறை அகிலேஷ் யாதவை சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?' என, பத்திரிகையாளர்கள் கேட்கவே, 'அகிலேஷ் யாதவை கையோடு பேக்கரிக்கு அழைத்துச் சென்று, ரசகுல்லாவை வாங்கி, ஊட்டி விடுவேன்...' என, மவுர்யா கூறினார்.
'அகிலேஷ் யாதவை கிண்டலடித்ததன் வாயிலாக, தனக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளது என்பதை கேசவ் பிரசாத் மவுர்யா நிரூபித்து விட்டார்...' என்கின்றனர், பத்திரிகையாளர்கள்.

