PUBLISHED ON : நவ 15, 2025 12:00 AM

'கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவதே இவர்களுக்கு வேலையாகப் போய்விட்டது...' என, கர்நாடக மாநில காங்கிரசார் பற்றி கவலையுடன் பேசுகின்றனர், அந்த கட்சியின் மேலிட தலைவர்கள்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, துணை முதல்வரான சிவகுமார், முதல்வர் பதவி மீது கண் வைத்துள்ளார். சித்தராமையாவுக்கும், சிவகுமாருக்கும் இடையிலான கோஷ்டி மோதல் மிகவும் பிரசித்தம். கட்சி மேலிட தலைவர்கள் தலையிட்டதால், இருவரும் அமைதி காத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான், சித்தராமையா, சமீபத்தில் தன்னுடைய குருபா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய அந்த சமூக தலைவர் ஒருவர், 'மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, தன் மகன் குமாரசாமியை கர்நாடகாவின் முதல்வராக்கினார்.
'தேவகவுடாவை விட பல மடங்கு செல்வாக்கு மிக்கவர் சித்தராமையா. எனவே, தேவகவுடாவைப் போல், சித்தராமையாவும், தன் மகன் யதீந்திராவை கர்நாடக முதல்வராக்கி அழகு பார்க்க வேண்டும். அதற்கு யார் இடையூறு ஏற்படுத்தினாலும், குருபா சமூகம், சித்தராமையாவுக்கு ஆதரவாக களம் இறங்கும்...' என்றார்.
இதையடுத்து, கர்நாடக காங்கிரசில் மீண்டும் கோஷ்டி மோதல் களைகட்டத் துவங்கியுள்ளது. சிவகுமார் ஆதரவாளர்கள், சித்தராமையாவுக்கு எதிராக கொந்தளிக்கின்றனர்.
காங்., மேலிட தலைவர்களோ, 'மறுபடியும் பஞ்சாயத்தை ஆரம்பிச்சிட்டாங்களா...?' என, புலம்புகின்றனர்.

