PUBLISHED ON : மே 02, 2025 12:00 AM

'இவர்களை எப்படி சமாளிப்பது...' என, மேற்கு வங்க பா.ஜ.,வினர் பற்றி புலம்பித் தீர்க்கிறார், அந்த மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.
அடுத்தாண்டு மத்தியில், மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில், ஆட்சியை தக்க வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார், மம்தா.
மற்றொரு பக்கம், எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதில், பா.ஜ.,வினர் உறுதியாக உள்ளனர். இதனால், மம்தா என்ன செய்தாலும், அதற்கு முட்டுக்கட்டை போடுவதில் அவர்கள் முனைப்புடன் உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் திகா என்ற இடத்தில், மாநில அரசு சார்பில் புதிதாக ஜெகன்னாதர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிஷேக அழைப்பிதழில், 'ஜெகன்னாதர் கோவில்' என்பதற்கு பதிலாக, 'ஜெகன்னாதர் கலாசார மையம்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள பா.ஜ.,வினர், 'தேர்தலில் ஹிந்துக்களின் ஓட்டுகளை வாங்குவதற்காக மம்தா நாடகமாடுகிறார். கோவில் என குறிப்பிடுவதில் அவருக்கு என்ன தயக்கம்.
'மற்ற மதத்தினர் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும் என்பதற்காக கலாசார மையம் என குறிப்பிட்டுள்ளார். இது, மீசைக்கும் ஆசை, கூழுக்கும் ஆசை கதையாக உள்ளது...' என, விமர்சிக்கின்றனர்.
மம்தாவோ, 'என்ன செய்தாலும் குற்றம் கண்டுபிடிக்கின்றனரே...' என, கவலையில் உள்ளார்.

