PUBLISHED ON : டிச 16, 2024 12:00 AM

'அநியாயத்துக்கு விசுவாசமாக இருக்கிறாரே...' என, லோக்சபா, பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே பற்றி, பொறாமையுடன் பேசுகின்றனர், அக்கட்சியின் சக எம்.பி.,க்கள்.
நிஷிகாந்த் துபே, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். பிரதமர் மோடி தலைமையிலான, இரண்டாவது ஆட்சி காலத்தின் போது, ஆளும்கட்சி தரப்புக்கு பார்லிமென்டில் பெரும் சவாலாக விளங்கியவர், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா.
தொழிலதிபர்களுடன், பா.ஜ., தலைவர்கள் தொடர்பு வைத்துள்ளதாக பார்லிமென்டில் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். அப்போது தான், மொய்த்ராவுக்கு எதிராக, நிஷிகாந்த் துபே ஒரு அணுகுண்டை வீசி, கிடுகிடுக்க வைத்தார்.
'பா.ஜ., தலைவர்கள் குறித்து பார்லிமென்டில் விமர்சிப்பதற்காக, பிரபல தொழிலதிபரிடம் லஞ்சம் மற்றும் பரிசு பொருட்களை மொய்த்ரா பெற்றுள்ளார்...' என, நிஷிகாந்த் துபே கூறினார். இதனால் மொய்த்ராவின், எம்.பி., பதவியே பறிபோனது.
தற்போதும் பார்லிமென்டில், எதிர்க்கட்சியினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார், துபே. இந்தியாவுக்கு எதிராக செயல்படும் அமெரிக்க தொழிலதிபர் சோரோஸ் நிதியுதவி அளிக்கும் அமைப்புக்கும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவுக்கும் தொடர்புள்ளதாக அவர் கூறிய குற்றச்சாட்டால், பார்லிமென்டே அமளி துமளியானது.
இதையெல்லாம் பார்த்த சக, பா.ஜ., - எம்.பி.,க் கள், 'நிஷிகாந்த் துபேவுக்கு மட்டும் இதுபோன்ற தகவல்கள் எங்கிருந்து கிடைக்கிறதோ...' என, புலம்புகின்றனர்.

