PUBLISHED ON : பிப் 20, 2024 12:00 AM

'எவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு பேசினாலும் எடுபடவில்லையே...' என கவலைப்படுகிறார், தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு.
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கும் இங்கு, அடுத்த சில மாதங்களில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து, ஆளுங்கட்சியின் தொந்தரவுகளுக்கு ஆளாகி நொந்து நுாலாகியுள்ள சந்திரபாபு நாயுடு, இந்த முறை எப்படியும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார்.
ஆனால், சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் கட்சி இதுவரை சந்தித்த தேர்தலில் கூட்டணி சேராமல் பெரிய வெற்றி பெற்றது இல்லை என்ற கடந்த கால நிகழ்வுகள், அவரை கவலைக்கு ஆளாக்கியுள்ளன.
இதனால், பா.ஜ., கூட்டணியில் இணைவதற்கு தொடர்ந்து முயற்சித்தும் இதுவரை பலன் கிடைக்கவில்லை; பா.ஜ., மேலிடமோ, ஜெகன்மோகன் ரெட்டி பக்கம் சாய்வதற்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, 'என் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை; இதுதான் என் கடைசி தேர்தல்...' என, உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.
ஆந்திரா மக்களிடையே, அவரது பேச்சுக்கு பெரிய அளவில் தாக்கம் எதுவும் ஏற்படவில்லை. 'அரசியல்வாதிகள் பேச்சு; விடிஞ்சா போச்சு...' என, பலரும் சமூக வலைதளங்களில் கிண்டல் அடிக்கின்றனர்.

