/
தினம் தினம்
/
அக்கம் பக்கம்
/
மத்தளத்துக்கு , இரண்டு பக்கமும் இடி!
/
மத்தளத்துக்கு , இரண்டு பக்கமும் இடி!
PUBLISHED ON : ஜன 12, 2024 12:00 AM

'பெரியண்ணன் போக்குடன் செயல்படுவதாக எங்களை விமர்சிக்கின்றனர்; ஆனால், அவர்கள் தான் பிடிவாதம் பிடிக்கின்றனர்...' என, 'இண்டியா' கூட்டணியில் உள்ள சக எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளால் புலம்புகிறார், காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
காங்கிரஸ், திரிணமுல் காங்., ஆம் ஆத்மி, தி.மு.க., உள்ளிட்ட, 28 கட்சிகள் இணைந்து, 'இண்டியா' என்ற பெயரில், வரும் லோக்சபா தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளன.
தொகுதி பங்கீடு விவகாரத்தில் இந்த கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், கூட்டணியின் அடுத்த கட்ட நகர்வு பாதிக்கப்பட்டுள்ளது.
'காங்கிரஸ் தலைவர்கள் இன்னும் கள நிலவரம் தெரியாமல் உள்ளனர். இப்போது, மூன்று மாநிலங்களில் மட்டுமே அவர்கள் ஆளுங்கட்சியாக உள்ளனர்.
'எனவே, மற்ற மாநிலங்களில் பிராந்திய கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை, அந்த கட்சி விட்டுக் கொடுக்க வேண்டும். இன்னும், நாங்கள் தான் பெரியண்ணன் என்ற மனப்பான்மையுடன் செயல்பட்டால், இழப்பு எங்களுக்கு அல்ல...' என, மற்ற கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன.
காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயோ, 'மேற்கு வங்கத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்த திரிணமுல் விரும்புகிறது. புதுடில்லி, பஞ்சாப், ஹரியானாவில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த, ஆம் ஆத்மி பிடிவாதமாக உள்ளது.
'ஆனால், நாங்கள் பிடிவாதம் பிடிப்பதாக போலி பிம்பத்தை கட்டமைக்கின்றனர். உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால், மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி...' என புலம்புகிறார்.

