PUBLISHED ON : நவ 20, 2024 12:00 AM

'தேவையின்றி பேசி பிரச்னையை ஏற்படுத்தி விட்டாரே...' என, சமாஜ்வாதி கட்சி எம்.பி.,யும், அந்த கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் பற்றி கூறுகின்றனர், உத்தர பிரதேச மாநில மக்கள்.
இங்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மெயின்புரி லோக்சபா தொகுதி, சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், முன்னாள் முதல்வருமான, மறைந்த முலாயம் சிங் யாதவின் சொந்த தொகுதி.
இங்கு, முலாயம் சிங் யாதவின் குடும்பத்தினர் தான் பெரும்பாலும் எம்.பி.,யாக இருப்பர். இதன்படி, முலாயமின் மருமகள் டிம்பிள் தற்போது எம்.பி.,யாக உள்ளார்.
உ.பி.,யின் பிரயாக்ராஜில் வரும் ஜனவரியில் மகா கும்பமேளா நடக்கவுள்ளது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடுவர்.
'இந்த நிகழ்வின் போது, பிரயாக்ராஜில், ஹிந்து சமூகத்தினர் மட்டுமே கடைகள் வைக்க வேண்டும்' என்ற சர்ச்சை இப்போது எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டிம்பிள், 'நாட்டில் எல்லாரும் சமம். ஹிந்துக்கள் அல்லாதவர்கள் கடை வைக்கக் கூடாதா...' என, காட்டமாக பேசியிருந்தார்.
'பகவான் கிருஷ்ணரின் வழிவந்த யாதவர் குடும்பத்தைச் சேர்ந்த பெண், இப்படி பேசலாமா...' என, பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
'டிம்பிள் தேவையின்றி பேசி வம்பில் சிக்கி விட்டாரே...' என, கவலைப்படுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.

