PUBLISHED ON : செப் 09, 2025 12:00 AM

'ஒரு மாறுதலுக்காக செய்தால், அதை பெரிய விவாத பொருளாக்குகின்றனரே...' என ஆவேசப்படுகிறார், உத்தர பிரதேச மாநில துணை முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பிரஜேஷ் பதக்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. வடமாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள், பைஜாமா போன்ற உடைகளைத் தான் வழக்கமாக அணிவர்.
பிரஜேஷ் பதக்கும், பைஜாமா தான் அணிந்திருந்தார். ஆனால், சமீபகாலமாக அவர் வேஷ்டி அணிந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தவிர்க்க முடியாத ஒரு சில நேரங்களில் மட்டுமே பைஜாமா அணிகிறார்.
அவரது இந்த உடை மாற்ற விவகாரத்தை வைத்து, 'பிரஜேஷ் பதக்கை, தென் மாநிலங்களில் ஏதாவது ஒன்றுக்கு கவர்னராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதனால் தான், அவர் வேஷ்டி அணிகிறார்...' என, வதந்தி பரவியது.
இதைக் கேள்விப்பட்ட பதக் ஆதரவாளர்கள், 'எங்கள் தலைவருக்கு, 61 வயது தான் ஆகிறது. அரசியலில் இன்னும் அவர் சாதிக்க வேண்டியது அதிகம் உள்ளது. அவரது வசதிக்காக வேஷ்டி அணிகிறார். இதை வைத்து, அவர் கவர்னராகப் போவதாகவும், அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும், அவரது அரசியல் எதிரிகள் கதை கட்டுகின்றனர்...' என, புலம்புகின்றனர்.