PUBLISHED ON : மார் 13, 2024 12:00 AM

'இந்த அரசியல்வாதிகள் அடிக்கும் கூத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டதே...' என கவலைப்படுகின்றனர், கேரள மக்கள்.
இங்கு, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் அட்டிங்கால் என்ற பகுதியில், புதிய சாலை துவக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரதமர் சாலை மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், இங்குள்ள பா.ஜ.,வினருக்கு அழைப்பு விடுக்காமல், அந்த தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., அடூர் பிரகாசம் தலைமையில் துவக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜ.,வினர், மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான முரளீதரன் ஏற்பாட்டின்படி, தாங்களாக ஒரு விழாவை நடத்தி முடித்தனர்.
'மத்திய அமைச்சர் முரளீதரன் முயற்சி காரணமாகவே, மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தியது...' என, விழாவில் பங்கேற்றோர் பேசினர்.
சில மணி நேரங்களுக்கு பின், காங்கிரஸ் எம்.பி., சார்பில் அதிகாரப்பூர்வ விழா நடந்தது. இதில், எம்.பி.,யின் முயற்சி காரணமாகவே இந்த திட்டம் நிறைவேறியதாக, காங்கிரசார் பேசினர்.
அந்த விழாவில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., சதீஷ், 'முதல்வர் பினராயி விஜயன் உதவி இல்லாமல் இந்த திட்டம் நிறைவேறி இருக்க சாத்தியமில்லை...' என்றார்.
இதைக் கேட்ட பொதுமக்கள், 'இவர்களுக்கு மத்தியில் நாம் எப்படி காலம் தள்ளப் போகிறோமோ...' என புலம்பியபடியே நடையை கட்டினர்.

