PUBLISHED ON : ஏப் 02, 2026 03:55 AM

'பதவியை தக்க வைப்பதற்காக எத்தனை, 'பல்டி'கள் வேண்டுமானாலும் அடிப்பார்...' என, தெலுங்கானா மாநில முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான ரேவந்த் ரெட்டி குறித்து கிண்டல் அடிக்கின்றனர், அங்குள்ள மக்கள்.
தெலுங்கானாவில், 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும், கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் இருக்க, ரேவந்த் ரெட்டியை முதல்வராக்கியது, கட்சி மேலிடம்.
அவரும், சுறுசுறுப்பாகத் தான் பணியாற்றினார். மற்ற அரசியல்வாதிகள் எல்லாம், சினிமா நடிகர்களை பார்த்து கலக்கம் அடைந்த சூழலில், ரேவந்த் ரெட்டி அதிரடியாக செயல்பட்டார்.
ஹைதராபாதில், 2024ல், சினிமா தியேட்டரில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, பெண் ஒருவர் பலியானார். இதற்கு, அங்கு வந்த பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தான் காரணம் எனக் கூறி, அவரை கைது செய்ய உத்தரவிட்டார், ரேவந்த் ரெட்டி. அவரது இந்த தைரியத்தை பார்த்து, சக அரசியல்வாதிகளே ஆச்சரியப்பட்டனர்.
ஆனால், ரேவந்த் ரெட்டி நடவடிக்கைகளில் இப்போது மாற்றம் தெரிகிறது. அல்லு அர்ஜுனுடன் நெருக்கம் காட்டத் துவங்கியுள்ளார். தெலுங்கானா அரசு சார்பில் சமீபத்தில் நடந்த விழாவில், அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான விருதை, ரேவந்த் ரெட்டி வழங்கினார்.
'அடுத்த சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் தான் இருக்கின்றன. அதில், அல்லு அர்ஜுன் ரசிகர்கள், தனக்கு எதிராக செயல்பட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான், இப்போதே அவரை, 'காக்கா' பிடிக்கிறார், ரேவந்த் ரெட்டி...' என, மக்கள் கூறுகின்றனர்.
