PUBLISHED ON : ஏப் 09, 2024 12:00 AM

'இவருக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என நாங்களே எதிர்பார்க்கவில்லை...' என்று, புதுடில்லி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் பன்சுரி சுவராஜ் பற்றி ஆச்சரியத்துடன் கூறுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள்.
இவர், முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, மறைந்த சுஷ்மா சுவராஜின் மகள். உச்ச நீதிமன்றத்தில் பிரபலமான வழக்கறிஞர்.
தன் தாய் இருந்தபோது, அரசியலில் அவ்வளவு ஆர்வம் காட்டாமல், வழக்கறிஞர் தொழிலில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார்.
இவரது பேச்சாற்றல், பிரசார களத்தில் சுறுசுறுப்பு போன்றவற்றால், கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, தங்கள் தொகுதிகளுக்கு வந்து பிரசாரம் செய்யும்படி பன்சுரி சுவராஜுக்கு, டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள தொகுதிகளைச் சேர்ந்த பா.ஜ., வேட்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்; அவரும், டில்லியில் உள்ள மற்ற தொகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார்.
'இந்த தேர்தலில் பன்சுரி சுவராஜ் வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் டில்லி மாநில அரசியலில் பா.ஜ., வின் முகமாக மாறுவார். தற்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெரும் சவாலாக இருப்பார்.
'இதை உணர்ந்து தான், பா.ஜ., மேலிடம் அவரை சரியான நேரத்தில் களம் இறக்கியுள்ளது. எதிர்காலத்தில் பா.ஜ.,வில் தவிர்க்க முடியாத முகமாக அவர் உருவெடுப்பார்...' என்கின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள்.

