PUBLISHED ON : மே 21, 2024 12:00 AM

'இப்போது அரசியல்வாதிகள் ரொம்பவே தெளிவாகி விட்டனர்...' என்கின்றனர், உத்தர பிரதேச மாநில மக்கள். இங்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
இங்கு, ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. முன்பெல்லாம் அரசியல்வாதிகள், தங்கள் வாரிசுகளை நேரடியாக வேட்பாளர்களாக அறிவித்து, களத்தில் இறக்கி விடுவர். இப்போது பிரசாரம் குறித்து பயிற்சி கொடுத்து, அதன்பின் தேர்தலில் களம் இறக்குகின்றனர்.
தற்போதைய தேர்தலில், உ.பி.,யின் கன்னோஜ் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். மெயின்புரி தொகுதியில் அகிலேஷின் மனைவி டிம்பிள் போட்டியிடுகிறார். இந்த இரண்டு தொகுதிகளும், சமாஜ்வாதி நிறுவனரும், அகிலேஷின் தந்தையுமான முலாயம் சிங் யாதவின் பூர்விக பகுதிகள்.
இந்த தொகுதிகளில், தன் தந்தை மற்றும் தாய்க்காக, அகிலேஷின் மகள் அதிதி தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். லண்டனில் உள்ள பல்கலையில் பட்டப்படிப்பு படித்து வரும் அதிதி, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இங்கு குடிசை குடிசையாக ஏறி இறங்கி பிரசாரம் செய்து வருகிறார்.
இதைப் பார்த்த பொதுமக்கள், 'பட்டப் படிப்பை விட, அரசியல் படிப்பில் தானே கல்லா கட்ட முடியும். அதனால் தான், அகிலேஷ், தன் மகளுக்கு நேரடியாக பயிற்சி கொடுத்து வருகிறார்...' என்கின்றனர்.

