PUBLISHED ON : ஜூன் 01, 2024 12:00 AM

'தேர்தலில் மட்டும் வெற்றி பெறாவிட்டால்,இவரது நிலைமை ரொம்ப மோசமாகி விடும்...' என, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பற்றி பேசுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
டில்லியில் நடந்த மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் சிக்கி, ஒரு மாதமாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கெஜ்ரிவால், தேர்தல் பிரசாரத்தை காரணம் காட்டி, இடைக்கால ஜாமினில் வெளியில் வந்துள்ளார்.
திரும்பவும் அவர், நாளை சிறைக்கு திரும்ப வேண்டும். இதற்கிடையில், பிரசாரத்தின் போது, 'தேர்தலில் இண்டியா கூட்டணி ஆட்சியை பிடித்தால், நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டியிருக்காது...' என கெஜ்ரிவால் பேசவே, அது பெரும் சர்ச்சையானது.
இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் இருந்து அவர் தப்பிப் பிழைத்தார். இந்நிலையில், 'என் உடல்நிலை மோசமடைந்து விட்டது. சிறையிலிருந்து வெளியில் வந்த பின்னும் உடல் எடை அதிகரிக்கவில்லை.
'எனக்கு பல உடல் உபாதைகள் இருப்பதால், விரிவான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, எனக்கான ஜாமினை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்க வேண்டும்...' என, கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அவரது மனுவை நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. இதையடுத்து சோகத்தில் மூழ்கியுள்ள கெஜ்ரிவால், 'சிறை அனுபவத்தை நினைத்தாலே வாழ்க்கையே வெறுத்து விடுகிறது. மீண்டும் சிறைக்கு செல்வதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை...' என, புலம்புகிறார்.

