PUBLISHED ON : மே 18, 2024 12:00 AM

'தேர்தல் நேரத்திலாவது கொஞ்சம் தீவிரம் காட்டலாமே...' என, காங்., பொதுச்செயலர் பிரியங்கா பற்றி பேசுகின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
சட்டசபை தேர்தல்கள், லோக்சபா தேர்தல் நேரத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் நாடு முழுதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து, தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்பது தான், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பம்.
ஆனால், கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை. தற்போதைய தேர்தலிலாவது இது நடக்கும் என, அவர்கள் எதிர்பார்த்தனர்.
சோனியாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவரால் பிரசாரம் செய்ய முடியவில்லை. ரேபரேலியில் ராகுல் வேட்புமனு தாக்கல் செய்தபோது மட்டும், உடன் வந்தார். ராகுல், சூறாவளி பிரசாரம் செய்யா விட்டாலும், ஓரளவு எதிர்பார்ப்பை நிறைவேற்றி வருகிறார்.
ஆனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரியங்கா தான், உ.பி.,யின் ரேபரேலி தொகுதிக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார். உ.பி.,க்கு வெளியே ஒரு சில மாநிலங்களில் மட்டுமே பிரசாரம் செய்து வருகிறார்.
இதனால் ஏமாற்றம் அடைந்துள்ள காங்., தொண்டர்கள், 'பிரியங்காவை நாங்கள் இந்திராவின் அவதாரமாகவே பார்க்கிறோம். அவரது பிரசாரத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், அவருக்கு அதில் ஆர்வம் இல்லையே; என்ன செய்வது...' என்கின்றனர்.

