உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / அங்கீகாரம்

அங்கீகாரம்

தயாரிப்பு : ஸ்வஸ்திக் விஷன்.
இயக்கம் : தென்பாதியான்
நடிப்பு : கே.ஜே.ஆர், சிந்துாரி விஸ்வநாத், வசுந்தரா, ரமா, விஜி வெங்கடேஷ், இசபெல்லா
ஒளிப்பதிவு : ஏ.விஸ்வநாத்
இசை : ஜிப்ரான்
வெளியான தேதி : ஜூன் 26, 2026
நேரம் : 2 மணிநேரம் 20 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5

சென்னையில் கூவம் கரையோரம் மிகச்சிறிய வீட்டில் வசிக்கும் துாய்மைப்பணியாளர் ரமாவின் மகனான கே.ஜே.ஆர் தடகள விளையாட்டில் கஷ்டப்பட்டு பல சாதனைகளை படைக்கிறார். ஆனால், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் அவர் விளையாட தடைகளை ஏற்படுத்துகிறார்கள் விளையாட்டுதுறை அதிகாரிகள். தனக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, நீதிமன்றம் செல்கிறார் கே.ஜே.ஆர். அங்கே அவருக்கு நியாயம் கிடைத்ததா? என்பது அங்கீகாரம் படத்தின் கதை.

தமிழ் சினிமாவில் விளையாட்டு பின்னணியில் பல கதைகள் வந்திருக்கின்றன. கோர்ட் ரூம் டிராமாவாக பல படங்கள் வந்துள்ளன. இரண்டையும் இணைத்து இதுவரை இல்லாத ஒரு கதைக்களத்தில், ஒரு புதுப்பார்வையுடன் அங்கீகாரத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் தென்பாதியான்.

அறம், க.பெ.ரணசிங்கம், அயலான், டாக்டர் படங்களின் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ஆளே மாறி, தடகள வீரராகவே உடலமைப்பை மாற்றி கதைநாயகனாக நடித்து இருக்கிறார். ஒரு ஏழை தடகள வீரர் சந்திக்கும் பணப்பிரச்னைகள், மனப்பிரச்னைகள், கஷ்டங்கள், புறக்கணிப்புகள், அவமானங்களை இயல்பான உடல்மொழியில் சொல்கிறார். இரண்டாம் பாதியில் கோர்ட் மூலமாக பொங்குகிறார். அவர் கேட்கும் கேள்விகள் ஒட்டு மொத்த கிரிக்கெட் அல்லாத விளையாட்டு வீரர்களின் குரலாக இருக்கிறது.

கே.ஜே.ஆரின் கேரக்டர், அவர் சம்பந்தப்பட்ட விளையாட்டு சீன்கள், போட்டிகள், குடும்ப சூழ்நிலை ஆகியவை சினிமாதனம் இல்லாமல், ஒரு தடகள வீரரின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்ப்பது மாதிரி இருக்கிறது. கதையின் மீதான பிடிப்பை ஏற்படுத்துகிறது. மத்திய, மாநில அரசுகள், விளையாட்டுதுறை ஆணையம், அதிகாரிகள், அதில் நடக்கும் முறைகேடுகள் என எல்லாவற்றையும் இரண்டாம் பாதியில் கிழிகிழி என கிழிக்கிறார். ஆனால், கிளைமாக்ஸ், அதற்கு முந்தைய ஒரு சண்டைக்காட்சியில் ஹீரோயிசம் தெரிகிறது. அதை தவிர்த்து இருந்தால் படம் இன்னமும் மக்களுடன் ஒன்றி இருக்கும்.

படத்தில் கவனிக்க வைக்கும் இன்னொரு கேரக்டர் அரசுக்கு ஆதரவாக பேசும் அட்வகேட் ஜெனரலாக வரும் விஜி வெங்கடேஷ், அவரின் கம்பீரமான உருவம், பேச்சு, எடுத்து வைக்கும் வாதம் சூப்பர், பதிலடிகள் சூப்பர். யாரும்மா இவங்க என கேட்க வைக்கிறார். என்ன அவரை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவராக காண்பித்தது ஏனோ? அதில் என்ன சந்தோஷமோ? அதேபோல், ஜட்ஜ் ஆக வரும் மோகன்ராம் நடிப்பும் , அவர் கேட்கும் கேள்வியும் செம. கோச் ஆக வரும் வசுந்தரா, விளையாட்டு துறை அதிகாரியாக வரும் அஜித் ஜோஷி, விளையாட்டு மந்திரியாக வரும் மன்சூர் அலிகானும் நல்ல தேர்வு, அவர்கள் நடிப்பும் ரசிக்க வைக்கிறது

ஹீரோ அம்மாவாக வரும் ரமா சம்பந்தப்பட்ட சீன்கள், அவர் சம்பந்தப்பட்ட கிளைமாக்ஸ் காட்சிகள் மனதை பிசைகிறது. ஹீரோ தங்கச்சியாக வரும் இசபெல்லா இன்னொரு விளையாட்டு வீராங்கனையாக வரும் சிந்துாரியும் அந்த கேரக்டராக வாழ்ந்து இருக்கிறார்கள். இப்படி சிறப்பான நடிகர்கள் தேர்வு, அவர்களின் இயல்பான நடிப்பு, அந்த கேரக்டர் மூலமாக சொல்ல வரும் விஷயங்கள் மற்ற படங்களில இருந்து அங்கீகாரத்தை தனித்து தெரிய வைக்கிறது. குறிப்பாக, பெண் விளையாட்டு வீரர்கள் சந்திக்கும் பிரச்னைகள், விளையாட்டுதுறையில் அரசியல் என்ட்ரி ஆவதால் ஏற்படும் பாதிப்புகளையும் அழுத்தமாக சொல்கிறது. துாய்மைப்பணியாளர்கள் வாழ்க்கை முறை, கூவம்கரையில் வசிக்கும் ஏழை மக்களின் தினசரி வாழ்க்கை, பாத்ரூம் கூட போக முடியாமல் அந்த பெண்கள் தவிக்கும் நிலை ஆகியவற்றையும சமூக அக்கறையுடன் காண்பித்து இருக்கிறார் இயக்குனர்.

இந்தியாவில் கிரிக்கெட் மட்டும் கொண்டாடப்படுவது ஏன்? தேசிய விளையாட்டு ஹாக்கியா? 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் உலக அளவிலான போட்டியில் ஏன் தங்கம் ஜெயிக்க முடியவில்லை. பல கோடி செலவழித்தும் விளையாட்டுதுறை முன்னேறாமல் ஏன் இருக்கிறது என பல கேள்விகளை, காட்சிகள், வசனங்கள் வழியே கேட்க வைக்கிறார் இயக்குனர். அதிலும் கோர்ட் சீன் வாதங்கள் நெத்தியடி. படத்தின் இன்னொரு பலம் வசனங்கள். ஒவ்வொன்றும் ஷார்ப். இப்போதைக்கு இப்படிப்பட்ட விளையாட்டு வீரருக்கு ஆதரவான படம் வந்ததில்லை எனலாம். ஆனாலும், கிளைமாக்ஸ், அதற்குமுந்தைய காட்சிகளில் வலு குறைகிறது. சில உணர்ச்சிகரமான சீன்களை வசனங்களால் கடத்தியிருக்கிறார்கள். ஏகப்பட்ட புள்ளி விவரங்களை தருகிறார்கள். அதை காட்சி படுத்தியிருந்தால் இன்னும் கதை வலுவாகி இருக்கும்.

வழக்கமான கதை இல்லாமல், காதல், காமெடி, பாடல்கள், பில்டப் இல்லாமல் தங்கள் அங்கீகாரத்துக்காக போராடும் விளையாட்டு வீரர்களின் வலி, புறக்கணிப்பு, இந்தியளவில் விளையாட்டுதுறையின் மறுபக்கத்தை ஆணி அடித்தாற்போல் சொல்லும் இந்த கதை, தவறான இடத்தில் இருப்பவர்களை , தவறான முடிவுகளை எடுப்பவர்களை நோக்கி கேட்கப்பட்ட சரியான கேள்வி. இந்த படம் பார்த்து சிலர் திருந்தினால், சிலர் அங்கீகாரம் பெற்றால் அதுவே படத்தின் வெற்றி. கிரிக்கெட்டை மட்டும் கொண்டாடும் நாட்டில் 33க்கும் அதிகமான மற்ற விளையாட்டுகளின் கதி, அதை தேர்ந்தெடுப்பவர்கள் நிலை என்ன என்ற நெத்தியடி கேள்வியை கேட்கும் கதை

அங்கீகாரம் - நெத்தியடி கேள்வி



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !