'அவதார்' 4 மற்றும் 5 பாகம் வெளியீடு அதிகாரபூர்வ அறிவிப்பு
ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய 'அவதார்' படம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. 2009ம் ஆண்டு வெளியான முதல் அவதார் உலகளவில் பெரும் வசூல் சாதனை படைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து 'அவதார் : தி வே ஆப் வாட்டர்' மற்றும் 'அவதார்: பயர் அண்ட் ஆஷ்' ஆகிய படங்கள் வெளியாகின. முதல் பாகம் அளவிற்கு அடுத்தடுத்த பாக படங்கள் இல்லாவிட்டாலும் வசூல் சாதனை படைத்தது. மூன்று திரைப்படங்களும் இணைந்து உலகளவில் சுமார் 6.75 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது.
அதிகரிக்கும் தயாரிப்பு செலவுகள், ஆண்டுகணக்கில் படத்திற்காக பணியாற்ற வேண்டியது இருப்பதால் மற்ற திட்டங்கள் குறித்து சிந்திக்க முடியவில்லை. இதனால் அவதார் கதையை முடித்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன் என்று ஜேம்ஸ் கேமரூன் கூறியிருந்தார். இதனால் 4ம் பாகம் வராது என்று ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் தற்போது 4 மற்றும் 5 பாகம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி, அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற நிகழ்வில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, அவதார் 4 திரைப்படம் 2029ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதியும், அவதார் 5 திரைப்படம் 2031ம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதியும் வெளியாகிறது.
ஒருவேளை ஜேம்ஸ் கேமரூன் அவதார் யுனிவர்சிலிருந்து விலகினாலும் வேறு இயக்குநர்களை கொண்டு 5 பாகம் வரை தயாரிப்பது என்று டிஸ்னி முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே 4 மற்றும் 5 பாகத்திற்கான பல காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. பண்டோரா கிரகத்தில் நவி சமூகத்தினரின் அடுத்த தலைமுறையின் கதையாக 4 மற்றும் 5ம் பாகங்கள் உருவாக்கப்படுகிறது. 5ம் பாகத்தின் இறுதியில் நவி மக்கள், உலகத்தோடு நட்புறவு கொண்டு அவர்கள் உலகத்திற்கு வருவதாக முடிக்கப்படுகிறது என தகவல் வெளியாகி உள்ளது.