பிளாஷ்பேக் : 30 ஆண்டுகளுக்கு முன்பே ரீல்ஸ் காட்சிகள் இடம் பெற்ற படம்
தற்போது ரீல்ஸ் தான் பிரபலம், ரீல்ஸ் பார்க்காமல் யாரும் தூங்குவதில்லை. ஆனால் தற்போது ரீல்ஸ்களில் இடம்பெறுவது போன்ற காட்சிகளுடன் வெளியான படம் 'கலிகாலம்'. 1992ம் ஆண்டு வெளியான இந்த படத்தை பஞ்சு அருணாசலம் இயக்கினார். ராதிகா, நிழல்கள் ரவி, ஜனகராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இதே பெயரில் வெளியான தெலுங்குத் திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.
இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். 'மனிதன் போகும் போக்கு நம் இதயம் தாங்குமா' என்ற டைட்டில் பாடலை இளையராஜா பாடினார். இந்த பாடலின் பின்னணியாக அப்போது உலக அளவில் டிரண்டிங்கான காட்சி துணுக்குகள் இடம் பெற்றது. கலவரங்கள், விளையாட்டு மோதல்கள், முக்கிய இறப்புகள், விலங்கு மனிதன் மோதல் இப்படியான காட்சிகள் இடம் பெற்றது. இது அப்போது புதுமையான விஷயமாக இருந்தது.
அதோடு இந்த படத்தின் கதையும் அதிரடியானது. ஒரு சாதாரண ஆலைத் தொழிலாளியாக ரகு ராம் (நிழல்கள் ரவி) உள்ளார். அவரின் தந்தை, மனைவி (ராதிகா), மகள், வேலை தேடும் மகன் (கார்த்திக்) ஆகியோர் இவர் ஒருவரின் வருவாயை நம்பியே வாழ்கின்றனர். தன் பிள்ளைகளின் திருமணத்திற்காகப் பணம் திரட்ட அவர் கடுமையாகப் போராடுகிறார். இறுதியில் தன் வேலையை விட்டு விலகி, அதன் பணப் பலன்களைக் கொண்டு அவர்களுக்கு திருமணம் முடிக்க முடிவு செய்கிறார். அதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக ஐதராபாத்திற்கு ரயிலில் பயணிக்கிறார். அந்த ரயில் விபத்தில் சிக்கி ஆற்றில் கவிழ்கிறது.
ரயில் விபத்தில் ரகுராம் இறந்த காரணத்தினால் அவர் வேலை செய்த ஆலையில் ரகுராமின் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை கிடைக்கிறது. குடும்பத்துக்கு ரயில்வே துறையால் இழப்பீடு வழங்கப்படுகிறது. ஒரு இலட்சம் ஆயுள் காப்பீடு பணம் வருகிறது. இதனால் ரகுராமின் கும்பத்தின் வறுமை நீங்கி நல்வாழ்வை அடைகின்றனர். இந்நிலையில் விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட ரகுராம் உயிருடன் திரும்பி வருகிறார். இதை அவரின் குடும்பத்தினர் எவ்வாறு எதிர்கொள்கின்றனர். என்பதே கதையாகும்.
இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.