டோரதியால் பெருமை - கீர்த்தி சுரேஷ் : மேடையிலேயே மோதிரம் பரிசளித்த மிஷ்கின்
புதியவர் பிரவீன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‛சத்தியவான் சாவித்திரி'. நாளை, நவம்பர் 20ம் தேதி படம் தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. சென்னையில் நடந்த இப்பட நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் பேசியதாவது...
இந்த பட இயக்குனர் பிரவீனை எனக்கு 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திலிருந்தே தெரியும். அப்போது அவர் இணை இயக்குநராக இருந்தார். இது ரொம்ப வருடங்களாக என் மனதிற்கு நெருக்கமாக இருக்கும் ஒரு கதை என்று பிரவீன் சொல்லிக் கொண்டே இருப்பார். பிரவீன் சாதாரண இயக்குநர்களைப் போல உட்கார்ந்து கொண்டே இருக்க மாட்டார். காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு சுற்றிக் கொண்டே இருப்பார். நான்கைந்து நாட்கள் உட்காருங்கள் பிரவீன் என்று சொல்லிப் பார்த்தேன். அப்புறம் எனக்குத்தான் சோர்வாகிவிட்டது.
மிஷ்கின் உடன் முதல் நாள் வேலை செய்யும்போது கொஞ்சம் பயமாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு பிறகு அவருடைய செல்லப் பிள்ளையாகிவிட்டேன். அதனால் தப்பித்துவிட்டேன். இரண்டாவது நாளே என்னிடம் வந்து, என் மகளும் உன்னைப் போலவே இருப்பாள் என்று சொல்லி அவரது போட்டோவை காட்டினார். அன்றிலிருந்து எங்களுக்குள் நல்ல உரையாடல்கள், சினிமா பற்றிய பேச்சுக்கள் என பல விஷயங்கள் நடந்தன. அவர் உண்மையான மனிதர். மனதில் பட்டதை எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் அப்படியே பேசக்கூடியவர். ஒரு நடிகராக அவர் எவ்வளவு பெரிய அசுரன் என்பதும், இயக்குநராக எவ்வளவு சிறந்தவர் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் ஒரு மனிதராகவும் அவர் மிகச் சிறந்தவர்.
டோரதி நான் ரசிச்சு பார்த்த படம். இன்னைக்கு இவ்வளவு விமர்சனங்கள் வருது, அதுதான் படத்தின் வெற்றி என்று பார்க்கிறேன். இன்ஸ்டாகிராம் திறந்தால் படம் பற்றி அவ்வளவு ரீல்ஸ் வருது. இந்த படத்தால் எனக்கும், படக்குழுவிற்கும் பெருமை. LGBTQ கம்யூனிட்டியை பற்றி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இப்படி ஒரு படம் எடுத்திருக்கார், அது பெருமைப்பட வேண்டிய விஷயம். இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவிலும் சமீபத்தில் வெளியான சிறந்த படம் இது. எனக்கு ரொம்ப ரொம்ப பெருமையாக இருக்கிறது என்றார்.
விழாவில் கீர்த்தி சுரேசுக்கு நடிகையர் திலகம் என்ற பட்டம் கொடுத்துவிட்டு, டோரதியில் சிறப்பாக நடித்ததற்காக மோதிரம் பரிசளித்தார் இயக்குனர் மிஷ்கின்.