கிராமி விருது போட்டியில் பாரதியார் பாடல்
திரைப்படங்களுக்கு உலகின் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். அதேபோன்று பாடல் மற்றும் இசைக்கான விருது கிராமி. இந்த விருது வென்ற தமிழ் இசையமைப்பாளர்களில் ஏ.ஆர். ரஹ்மான் முதன்மையானவர். 'ஸ்லம்டாக் மில்லினர்' படத்திற்காக அவர் இந்த விருதை வென்றார்.
வி. செல்வகணேஷ் மற்றும் கணேஷ் ராஜகோபாலன் 'திஸ் மொமென்ட்' ஆல்பத்திற்காக சிறந்த உலகளாவிய இசை ஆல்பம் பிரிவில் கிராமி விருதை வென்றனர். சென்னையில் பிறந்து வளர்ந்த இசையமைப்பாளரும் பாடகியுமான சந்திரிகா டாண்டன், தனது 'திரிவேணி' ஆல்பத்திற்காக 'சிறந்த நியூ ஏஜ் ஆல்பம்' பிரிவில் விருதை வென்றார்.
இந்த வரிசையில் தற்போது இசையமைப்பாளர் தேவன் ஏகாம்பரம் மற்றும் பாடகி சுஷா ஆகியோரின் கூட்டணியில் உருவான 'வருவாய்' என்ற பாடல், கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற சாதனையைப் படைத்துள்ளது. 2027-ம் ஆண்டிற்கான 69வது கிராமி விருதுகளின் 'சிறந்த உலகளாவிய இசைப் படைப்பு பிரிவில், மகாகவி பாரதியாரின் பாடலும் போட்டி போடுகிறது.
இது குறித்து பாடகி சுஷா கூறும்போது ''பாரதியாரின் பல பிரபலமான பாடல்கள் உள்ளன. ஆனால், அவருடைய பாடல் ஒன்றைச் செய்ய வேண்டும் என தேவன் ஏகாம்பரம் கூறியபோது, வழக்கமான பாடலாக இல்லாமல் சற்று வித்தியாசமான ஒன்றைத் தேட விரும்பினேன். பல ஆண்டுகளுக்கு முன்பு என் தாயார் எனக்குக் கற்றுக் கொடுத்த பாடல்தான் இது. நேற்று கிராமி பரிந்துரைகள் அறிவிக்கப்படும் நாள் என்பதே என் நினைவில் இல்லை. எனக்கு அது வழக்கமான ஒரு நாளாகத்தான் இருந்தது. திடீரென என் செல்போனில் வாழ்த்துச் செய்திகள் குவியத் தொடங்கி விட்டன. எட்டு திசையெங்கும் கலை செல்வங்களை கொண்டு வந்த சேர்க்க சொன்ன பாரதியின் பாடலை திசையெங்கும் கொண்டு சென்றதில் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். என்றார்.