பிளாஷ்பேக்: கதையின் நாயகனாகவும் கதாசிரியராகவும் எம் ஜி ஆர் பணியாற்றிய ஒரே திரைப்படம்
சினிமா சம்மந்தப்பட்ட ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு அதிசயிக்கத்தக்க திரைக் கலைஞராகவும், சினிமா என்ற ஊடகத்தை மிகச் சரியாக கையாண்டு, சரித்திரத்தில் இடம் பிடித்த ஒரு சாதனையாளராகவும், இன்றும் பார்க்கப்பட்டு வருபவர்தான் புரட்சி நடிகர் எம் ஜி ஆர். நாடக மேடையின் அனுபவம் பெற்று, பின் வெள்ளித்திரைக்கு விஜயம் செய்து, வியர்வை சிந்தி, வெற்றி என்ற இலக்கை எட்டிப் பிடிக்க வெகு காலம் பிடித்தது இவருக்கு. ஏறக்குறைய 15 திரைப்படங்களில் துணை வேடமேற்று நடித்து, அதன் பின்னர் “ராஜகுமாரி” என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக உயர்வு பெற்ற இவர், மற்ற நடிகர்களிடமிருந்து மாறுபட்ட ஒருவராக, தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டிருந்தார்.
கதை, பாடல், வசனம், சண்டைக் காட்சிகள் என ஒவ்வொன்றிலும் இவரது பாணி தனித்துவமிக்க ஒன்றாக வெளிப்பட்டு, இவருக்கென ஒரு பெரிய ரசிகர் வட்டம் ஒன்று உருவானது. இவர் நாயகனாக மட்டும் நடித்து வெளிவந்த திரைப்படங்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமானவை. அவற்றில் ஒன்றில் கூட, இவரது கொள்கைக்கு மாறான கதையோ, வசனமோ, பாடல்களோ, காட்சி அமைப்போ படங்களில் இடம்பெற இவர் மனம் என்றுமே அனுமதித்ததில்லை. இசை ஞானம், இலக்கிய ஞானம், ஒளிப்பதிவு, எடிட்டிங், தயாரிப்பு, இயக்கம், நடிப்பு என சினிமா சம்மந்தமான அனைத்துத் துறையிலும் நிபுணத்துவம் பெற்ற இவர் கதாசிரியராக பணியாற்றிய திரைப்படம் ஒன்று மட்டுமே. அந்தத் திரைப்படத்தைப் பற்றித்தான் நாம் இங்கு காண இருக்கின்றோம்.
இயக்குநர் பி ஆர் பந்துலுவின் “பத்மினி பிக்சர்ஸ்” நிறுவனத்திற்காக “ரகசிய போலீஸ் 115”, “தேவர் பிலிம்ஸ்” நிறுவனத்திற்காக “தேர்த்திருவிழா”, “காதல் வாகனம்”, 'சத்யா மூவீஸ்'க்காக “கண்ணன் என் காதலன்”, 'ஜேயார் மூவீஸ்' தயாரிப்பில் “புதிய பூமி”, சிறந்த நடிகருக்கான தமிழ் நாடு அரசு சினிமா விருதினை எம் ஜி ஆருக்கு பெற்றுத் தந்த “குடியிருந்த கோயில்”, 'ஜெமினி பிக்சர்ஸ்' நிறுவனத்திற்காக எம் ஜி ஆர் நடித்துக் கொடுத்த ஒரே திரைப்படமும், அவரது 100வது திரைப்படமுமான “ஒளிவிளக்கு” என இப்படி வரிசையாக எம் ஜி ஆர் திரைப்படங்கள் வெளிவந்த ஒரு சிறப்புமிக்க ஆண்டுதான் 1968. இந்த ஆண்டில் மட்டும் வெளிவந்த இவரது திரைப்படங்களின் எண்ணிக்கை எட்டு. அவற்றில் ஒன்றுதான் “கணவன்” என்ற திரைப்படம்.
திருமணத்தை வெறுக்கும் செல்வ சீமாட்டியாக ராணி என்ற கதாபாத்திரத்தில் ஜெயலலிதா, கணபதி என்ற காசாளரின் கொலை வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனைக் கைதியாக வேலய்யன் என்ற கதாபாத்திரத்தில் எம் ஜி ஆர். தனது தந்தையின் மரணத்திற்குப் பின் அவரது உயிலின் படி, வாரிசாக சொத்துக்களைப் பெற, ராணி திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட, அதற்காக மரண தண்டனைக் கைதியான வேலய்யனை ராணி திருமணம் புரிய, எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு, வேலய்யன் நிரபராதி என விடுவிக்கப்பட, ராணியும், வேலய்யனும் எவ்வாறு வாழ்க்கையில் இணைகின்றனர் என்பதுதான் இந்தத் திரைப்படத்தின் கதை. “வுட் கட்டர்” என்ற ரஷ்ய நாவலை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தின் நாயகனாக எம் ஜி ஆர் நடித்திருந்ததோடு, கதாசிரியராகவும் பணிபுரிந்திருக்கின்றார். எம் ஜி ஆர் கதாசிரியராகப் பணிபுரிந்த ஒரே திரைப்படம் இந்த “கணவன்” திரைப்படம்தான்.
எம் ஜி ஆரின் அதிகப்படியான திரைப்படங்களை இயக்கியவரும், அவரது ஆஸ்தான இயக்குநர்களில் மிக முக்கியமானவருமான இயக்குநர் ப நீலகண்டன் இயக்கிய இத்திரைப்படத்தில் எஸ் ஏ அசோகன், ஆர் எஸ் மனோகர், விஜயகுமாரி, சோ, மனோரமா, என்னத்த கன்னையா, சுந்தரிபாய் என பலர் நடித்திருக்க, 1968ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று வெளிவந்தது இத்திரைப்படம். படம் வெளியானபோது, மதுரை தங்கம் திரையரங்கின் நுழைவாயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக அப்போது மூன்று பேர் உயிரிழந்தனர். எம் ஜி ஆர் கதாசரியராக பணியாற்றிய ஒற்றைத் திரைப்படமான இந்த “கணவன்” திரைப்படம், அவரது மற்ற வெற்றித் திரைப்படங்களின் வரிசையில் இணையாமல் போனது என்பது துரதிர்ஷ்டமான ஒன்று.