ஹனுமன் பட ஹீரோ தேஜா சஜ்ஜாவிற்கு டும் டும்
வளர்ந்து வரும் தெலுங்கு இளம் நடிகர் தேஜா சஜ்ஜா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகாகி பின்னர் 'ஜாம்பி ரெட்டி' படத்தின் மூலம் ஹீரோவானார். பிறகு 'ஹனுமான்' திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் 'சூப்பர் ஹீரோ'வாக உருவெடுத்தார். தற்போது மிரள், ஜாம்பி ரெட்டி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஐதராபாத் தொழிலதிபர் மகள் மவுரியாவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்கள் நிச்சயதார்த்த விழா ஐதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இருவீட்டாரின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் முன்னிலையில் இந்த விழா நடந்தது.
'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி, தெலுங்கானா ஆளுநர் சிவ பிரதாப் சுக்லா, மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, தெலுங்கானா திரைப்பட துறை அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி, அமைச்சர் சீதக்கா, முன்னாள் அமைச்சர்கள் ஹரீஷ் ராவ், கண்டா ஸ்ரீனிவாச ராவ் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்களது திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.