17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த ஹிட் பட நடிகர்கள்
மலையாளத்தில் குணசித்திர நடிகர்களான சித்திக், முகேஷ், ஜெகதீஷ் மற்றும் அசோகன் ஆகிய நால்வரும் இணைந்து தற்போது உருவாகியுள்ள 'பாதிரா குறுக்கன்' என்கிற படத்தில் நடித்துள்ளனர். இப்படிப்பட்ட குணச்சித்திர நடிகர்கள் ஒன்றாக இணைந்து நடிப்பது ஒன்றும் பெரிய ஆச்சரியம் இல்லையே என்று நினைக்கலாம். ஆனால், இந்த நால்வரும் தான் படத்தின் கதாநாயகர்கள்.
அது மட்டுமல்ல, இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால், கடந்த 1990ல் மலையாளத்தில் 'இன் ஹரிஹர் நகர்' என்கிற படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதன் பிறகு 2009ல் '2 ஹரிஹர் நகர்' என்கிற படம் அதன் இரண்டாம் பாகமாக வெளியாகி அதுவும் வெற்றி பெற்றது. இந்த இரண்டு பாகங்களிலும் கதாநாயகர்களாக நடித்தவர்கள் இந்த நான்கு பேரும் தான். அதன் பிறகு இந்த நால்வரில் இருவர் அல்லது மூவர் வெவ்வேறு படங்களில் இணைந்து நடித்திருந்தாலும் கூட, மீண்டும் இந்த நால்வரும் இணைந்து நடிப்பது என்பது கிட்டத்தட்ட 17 ஆண்டிற்குப் பிறகு இந்த 'பாதிரா குறுக்கன்' படம் மூலமாக மீண்டும் நடந்துள்ளது.
டிசம்பர் 11ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தில் இந்த நால்வரும் முதன்முறையாக இணைந்து ஒரு பாடலையும் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஜோயஸ் வேணுகோபால் என்பவர் இயக்கியுள்ளார். தவிர, நடிகர்கள் வின்சென்ட், வினித் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.