உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம்...! கமலைப் பொறுத்தவரை காவியம்...!!

ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம்...! கமலைப் பொறுத்தவரை காவியம்...!!

நீதி தாமதமாவது அநீதிக்கு ஒப்பாகும் என்பது திரைத்துறையில் கமல் ஒருவருக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ஒன்று. அவரது நல்ல படங்கள் சிலவற்றை அவை ரிலீஸான காலங்களில் தவறவிட்டு, வசூல் ரீதியாக கமலைக் கதறவிட்டு தற்போது உச்சுக் கொட்டுவதை சமூக வலைதளங்களில் அன்றாடம் தரிசிக்க முடிகிறது. கல் நெஞ்சோடு அவற்றுக்கு கல்ட் கிளாசிக் என்று காலம் கடந்த ஆராதனைகள் வேறு.

இந்த துயர சம்பவங்களின் முதல் புள்ளி கமலின் 100 வது படமான 'ராஜபார்வை'யில் துவங்குகிறது. படம் வெளியான ஆண்டு 1981. சிங்கீதம் சீனிவாசராவின் நேர்த்தியான இயக்கத்தில் ராஜாவின் ஆத்மார்த்தமான இசையில் கமல், மாதவியின் கைதேர்ந்த நடிப்பில் அன்றைய தேதிக்கு பல நவீன தொழில் நுட்பத்துடன் வந்த படம். கமலின் ராஜ்கமல் நிறுவனத் தயாரிப்பு. மற்றவர்களோடு கமல் ரசிகர்களும் சேர்ந்து கைவிட்ட படம். கமல் கையை முதல் முதலாக சுட்ட படம்.

குணா [ 1991]
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது என்று காதல் நெஞ்சங்களைத் தட்டி எழுப்பிய, நிஜமாகவே ஒரு புனிதமான படம். கமல் நடிப்பில் கொடிகட்டிப் பறக்க , எத்தனை முறை கேட்டாலும் சிலிர்க்கவைக்கிற 'கண்மணி அன்போடு' துவங்கி இதயத்தை இழுக்கிற இளையராஜாவின் ஆறு பாடல்கள், அபிராமியாகவே வாழ்ந்த தேவதை ரோஷினியின் நடிப்பு என்று மாயாஜாலங்கள் நிறைந்த அற்புதப் படைப்பு. அன்று திரையரங்குளை தவற விட்டு ரசிகர்கள் இன்று யூடியூப் தளங்க்களில் தேடிதேடி ரசிக்கிறார்கள்.

மகாநதி [ 1994]
கமலின் டாப்டென் படங்கள் என்று இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து பட்டியல் போட்டாலும் இப்படம் எப்போதும் முதல் இடத்தில் நிற்கும். இப்படம் ஒரு தந்தையின் கண்ணீர் காவியம். கமலுக்கு நிச்சயம் இன்னொரு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். 'ஸ்ரீரங்க ரங்க நாயகனின் பாதம்', 'சாமியா பூதமா' பாடல்களில் மட்டுமின்றி பின்னணி இசையிலும் ராஜா மாஸ்டர் கிளாஸ் எடுத்த படம். படத்துக்கு சரியான ஓபனிங் கிடைக்காத வேதனையில் 'இப்படம் கண்டிப்பாக 100 நாட்கள் ஓடும் என்று தினசரிகளில் கமல் விளம்பரம் கொடுத்தும் பார்த்தார். நதியை விட விதி வலியது அல்லவா? மகத்தான படத்தை மக்கள் தோற்கடித்தார்கள்.

ஹே ராம் [2000]
பிரம்மாண்டமான கலை இயக்கம், உடை வடிவமைப்பு, ஒளிப்பதிவு, பின்னணி இசை எனப் பல அம்சங்களில் சர்வதேசத் தரத்தை நோக்கி நகர்ந்த கமல் இயக்கிய படம். சாகேத் ராம் என்ற பாத்திரத்தில் கமல் சாகஸம் செய்திருந்தார். இப்படத்தின் திரைக்கதையை பல்கலைக் கழகங்களில் பாடங்களாக வைக்கலாம் எங்கிற அளவுக்கு உன்னதமான படைப்பு. விமர்சகர்கள் படத்தைக் கொண்டாடினார்கள். விநியோகஸ்தர்கள் சரியான வசூல் இல்லாமல் திண்டாடினார்கள்.

ஆளவந்தான் [2001]
இந்தப் படத்தில் இடம்பெற்ற அனிமேஷன் சண்டைக் காட்சிகள், வன்முறையை வெளிப்படுத்திய விதம், ஒப்பனை, காட்சியமைப்பு ஆகியவை அன்றைய தமிழ் சினிமாவுக்கு மிகவும் புதுமையானவை. நந்து ,விஜய் என்கிற இரு வேடங்களில் கமல் கலக்கியிருந்தார். தனது முத்திரைப் படம் என்று கமல் பேட்டிகளில் சொல்லிக் கொண்டிருக்க அவர் நித்திரையைப் பறித்த படம்.

அன்பே சிவம் [ 2003]
விபத்தில் சிக்கி முகம் சிதைந்த நல்ல சிவம் என்ற கேரக்டரில் கமல் நடித்த இன்னொரு காவியப்படம் இது. காதலை சின்னதாக ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு, அன்பையும் மனித நேயத்தையும் முன்னிறுத்திய படம். மாதவனும் ஒரு முக்கிய பாத்திரத்தில் பிரமாதமான நடிப்பை வழங்கியிருந்தார்.. ரிலீஸான சமயம் தியேட்டர்களை காற்றாட விட்டுவிட்டு இன்று போற்றிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மும்பை எக்ஸ்பிரஸ் [2005]
தமிழில் பி.சி.ஸ்ரீராமின் 'வானம் வசப்படும்' படத்துக்குப் பின்னர் இரண்டாவது டிஜிட்டல் முயற்சி. ஸ்ரீராமின் படமோ மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்து. ஆனால் கமல் மிகப்பெரிய பட்ஜெட்டில் அந்த ரிஸ்கை எடுத்தார். டார்க் காமெடி ஜானரில் இப்படம் ஒரு முன்னெடுப்பு. மக்கள் படத்தைப் புரிந்துகொள்ளாமல் படுதோல்வி அடையச் செய்தார்கள்.

உத்தம வில்லன் [2015]
தனது சொந்த வாழ்க்கையை ஒட்டியது போல கமல் கதை, திரைக்கதை எழுத நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கிய படம். இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத் தயாரிப்பு. கமலின் குருநாதர் பாலசந்தர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். படத்தில் பல நெகிழ்ச்சியான காட்சிகள் இருந்தாலும் கதையின் இடையே சொல்லப்பட்ட ஒரு பாரம்பரிய கலைக்கூத்து மக்களுக்கு புரிபடவில்லை. எனவே படம் மகத்தான தோல்வி கண்டு தயாரிப்பாளருக்கு கமலை வில்லனாக்கியது.

இப்பட்டியலில் 'மன்மதன் அம்பு', 'தூங்காவனம்' என்று இன்னும் சில படங்கள் இருந்தாலும் அவை மேற்படி படங்கள் அளவுக்கு சிலாகிக்கத் தக்க படங்கள் அல்ல. விக்ரம் 2 வின் மசாலா வெற்றிக்குப் பின்னர், இன்று கமலும் 'சண்டியர்' போன்ற மசாலாப் படங்கள் பக்கம் தன் கவனத்தை திருப்பியிருக்கும் நிலையில் 'ஹே ராம்' என்று மனதை சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !