பிளாஷ்பேக் : கம்பெனி பெயரை சூட்டிக்கொண்ட நடிகைகள்
பொதுவாக நடிகர், நடிகைகள் தாங்கள் நடித்த புகழ்பெற்ற படத்தின் பெயர் அல்லது தங்கள் கேரக்டரின் பெயரை தங்கள் பெயருக்கு முன்னால் வைத்துக் கொள்வது வழக்கம். அரிதாக ஒரு சிலர் தாங்கள் பணியாற்றிய கம்பெனியின் பெயரை தங்கள் பெயருக்கு பின்னால் வைத்துக் கொண்டுள்ளார்கள். நடிகர்களை பொருத்தவரை ஜெமினி கணேசனை குறிப்பிடலாம். பிற்காலத்தில் சூப்பர் குட் நிறுவனத்தின் பெயரை பல நடிகர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் வைத்துக் கொண்டார்கள்
அவரைப் போன்று தங்கள் பெயருக்கு பின்னால் 'ஜெமினி' என்ற அடைமொழியை வைத்துக்கொண்ட நடிகைகள் ஜெமினி சந்திரா, ஜெமினி சந்திரகாந்தா.
ஜெமினி சந்திரா : ஜெமினி ஸ்டூடியோஸ் தயாரித்த படங்களில் மாதச் சம்பளத்திற்கு நடித்துப் புகழ்பெற்றதால் 'ஜெமினி சந்திரா' என்று அழைக்கப்பட்டு பின்னர் அதனையே தன் பெயராகவும் வைத்துக் கொண்டார்.
'உத்தம புத்திரன்' படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து யாரடி நீ மோகினி என்ற புகழ்பெற்ற பாடலுக்கு நடனமாடியவர். நாகமலை அழகி , தெய்வத்தாய், பட்டினத்தார், கப்பலோட்டிய தமிழன், பாகப்பிரிவினை, தாய் சொல்லைத் தட்டாதே போன்றவை இவர் நடித்த முக்கிய திரைப்படங்கள்.
ஜெமினி சந்திரகாந்தா : குணச்சித்திரம் மற்றும் கதாநாயகி என 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஜெமினி சந்திரகாந்தா. அப்போது இதே பெயரில் இன்னொரு நடிகை இருந்ததால் தன்னை அறிமுகப்படுத்திய ஜெமினி நிறுவனத்தின் பெயரை தன் பெயருக்கு முன்னால் வைத்துக் கொண்டார் இவருடைய இயற்பெயர் லட்சுமிகாந்தம்.
விஜயபுரி வீரன், இது சத்தியம், கலைக்கோவில், பந்த பாசம், தெய்வத் திருமகள், துளசி மாடம், முத்து மண்டபம் மற்றும் மாய மனிதன் போன்றவை இவர் நடித்த படங்களில் முக்கியமானவை.