சுக்கு காபி விற்றாலும் விற்பேனே தவிர சுயமரியாதையை விட்டுத்தர மாட்டேன் - டி.ராஜேந்தர் பேட்டி
இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட டி.ராஜேந்தர் இன்று 71வது பிறந்தநாளை கொண்டினார். சென்னை தி.நகரில் உள்ள ஆபீசில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர், அவர் அளித்த பேட்டி...
என்னை வாழ வைத்த ரசிகர் பெருமக்களை மறக்க மாட்டேன். நான் தஞ்சைக்காரன், தன்மானம் மிக்கவன். சுங்குவார் சத்திரத்தில் சுக்கு காபி விற்றாலும் விற்பேன். நான் சுயமரியாதை விட்டு, சொர்க்கத்தை கூட விரும்பமாட்டேன். அந்த காலத்தில் ஏகப்பட்ட நல்ல விஷயங்களை செய்தேன். எனக்கு ஆண்டவன்தான் முக்கியம். நான் என்ன செய்தேன் என மக்களுக்கு தெரியும். இன்று நான் வந்தபோது மக்கள் அன்போது வாழ்த்தினார்கள். எனக்கு அது போதும்.
நான் சென்னைக்கு வந்தபோது தாடியுடன் வந்தேன். கோடியுடன் வரவில்லை, பணப்பெட்டியுடன் வரவில்லை, ரயில் பெட்டியை தட்டிவிட்டு வந்தேன். ஒரு தாயின் சபதம் வெற்றி விழாவுக்கு, என் தங்கை கல்யாணி வெற்றி விழாவுக்கு நுாறுக்கும் அதிகமான தங்கைகளுக்கு தங்கதாலி கொடுத்தேன். அந்த நிலையை ஆண்டவன் எனக்கு கொடுத்து இருக்கிறான். இன்று 3 ஆயிரம் கிலோ அரிசி கொடுத்து இருக்கிறேன்.
2 கே கிட்ஸ், ஜென்ஸீ தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு விஷயத்தை சொல்கிறேன். நான் ஏகப்பட்ட அவமானம், கேலி, கிண்டல், புறக்கணிப்பு, தடைகளை சந்தித்து இருக்கிறேன். அதை எல்லாம் ஒரு காதில் வாங்கி, இன்னொரு காதில் அனுப்பிவிட வேண்டும். அதை மனதில் வைத்து கொள்ளக் கூடாது. இதயத்தில் தன்னம்பிக்கையை மட்டும் கொண்டு செல்ல வேண்டும். அதுதான் என் வெற்றி ரகசியம்'' என்றார்.