ஜேசன் சஞ்சயின் சிக்மா புரமோஷனில் கலந்து கொண்ட சிரஞ்சீவி!
தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள முதல் படமான 'சிக்மா', அக்டோபர் 2ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் ஆந்திரா - தெலுங்கானா போன்ற பல பகுதிகளில் தீவிர புரமோஷனில் ஈடுபட்டு வருகிறார் ஜேசன் சஞ்சய். அவருடன் படத்தில் நடித்துள்ள சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா உள்ளிட்ட பலரும் பங்கேற்று வருகிறார்கள்.
இந்நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற சிக்மா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சிரஞ்சீவி பங்கேற்றுள்ளார். அப்போது அப்படத்தை பற்றிய சில பாசிட்டிவானா விஷயங்களை பேசி சிக்மா படத்துக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார் சிரஞ்சீவி.
இந்த நிகழ்ச்சியில், சிரஞ்சீவியுடன் ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா, எஸ்.எஸ்.தமன் ஆகியோர் இடம்பெற்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது முதல் படத்தை எப்படியாவது சூப்பர் ஹிட் படமாக்கிவிட வேண்டும் என்பதற்காக, பெரிய அளவில் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் ஜேசன் சஞ்சய்.
அதோடு, தமிழகத்தில் நடைபெறும் சினிமா புரமோஷன் நிகழ்ச்சிகளில் தனது தந்தையான முதல்வர் விஜய் பங்கேற்காத போதும், அவரது பெயரை மேடைகளில் பயன்படுத்திக் கொண்டு வருகிறார் ஜேசன் சஞ்சய். இதன் மூலம் சிக்மா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்படத் தொடங்கியது.