பிளாஷ்பேக் : இயக்குநரான ஜெயசித்ரா
தமிழ் சினிமாவில் நடிகையாக இருந்து இயக்குநர் ஆனவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தமிழில் முதல் நாயகி டி.பி.ராஜலட்சுமியே இயக்குநர் ஆனவர்தான். 80களில் ஸ்ரீப்ரியா, லட்சுமி, ஜெயதேவி என இயக்குநர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் ஜெயசித்ரா.
பிசியாக நடித்துக் கொண்டிருந்த ஜெயசித்ராவிற்கு 90களின் தொடக்கத்தில் தானே தயாரிப்பாளராகி, இயக்குநராகி நடித்த படம் 'புதிய ராகம்'.
இதில் ஜெயசித்ராவுடன் ரகுமான், ரகுவரன், ரூபினி உள்ளிட்ட பலர் நடித்தனர். ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். தன்னை உயிராக காதலித்த ரகுமானை விட்டு விட்டு சந்தர்ப்ப சூழ்நிலையால் ரகுவரனை மணக்கிறார் ஜெயசித்ரா. கட்டிய தாலிக்கு மதிப்பு கொடுத்து கொடுமைகளை தாங்கிக் கொண்டு வாழ்க்கிறார். ஒரு கட்டத்தில் ரகுவரனை தூக்கி எறிந்து விட்டு வெளியேறுகிறார் ஜெயசித்ரா. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
கே.பாலச்சந்தர் பாணியில் ஜெயசித்ரா படத்தை இயக்கி இருந்தாலும் படம் வெற்றி பெறவில்லை. அன்னபந்தலு என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி அங்கும் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு ஜெயசித்ரா படம் இயக்கவில்லை. பல வருடங்களுக்கு பிறகு தன் மகனை நடிகனாக அறிமுகப்படுத்த 'நானே என்னுள் இல்லை' என்ற படத்தை இயக்கினார். அந்த படமும் வெற்றி பெறவில்லை.