தனுஷ் புதிய படத்திற்கு சிக்கல் ?, மீண்டும் பஞ்சாயத்து
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் அடுத்து நடிக்க உள்ள படத்திற்கு புதிய சிக்கல் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 'லப்பர் பந்து' படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து இயக்க உள்ள இந்தப் படத்திற்கு திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பான 'பெப்ஸி' ஒத்துழைப்பு தர மாட்டோம் எனக் கூறியுள்ளதாம்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தங்களுக்கு இது குறித்து சொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதனால், படப்பிடிப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
2024ம் ஆண்டு இப்படி ஒரு சிக்கல் வந்தது. தேனாண்டாள் நிறுவனத்திற்கும், பைவ் ஸ்டார் நிறுவனத்திற்கும் படம் நடித்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டு அந்தப் படங்களை தனுஷ் நடித்துக் கொடுக்கவில்லை. ஆனால், வேறு படங்களில் நடித்து வந்தார். தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்க, தனுஷ், இயக்கி நடிக்க ஆரம்பமான படம் சீக்கிரத்திலேயே நின்று போனது. அப்படங்களின் தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் அளித்த நிலையில் 2024ல் தயாரிப்பாளர் சங்கத்திற்கம் நடிகர் சங்கத்திற்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து ஒரு முடிவு எட்டப்பட்டது.
அப்போது பேசியபடி தனுஷ் நடந்து கொள்ளவில்லை, அதனால், அவரது புதிய படங்களுக்கு ஒத்துழைப்பு தரக் கூடாது என சம்பந்தப்பட்டவர்கள் தற்போது மீண்டும் புகார் அளித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
மீண்டும் பஞ்சாயத்து நடந்து சுமூக முடிவு எட்டப்படுமா, நிரந்தரமாக இந்த சிக்கல் தீர்க்கப்படுமா என்பது திரையுலகினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.