உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமாவுக்கு வரும் வழி... நடிகை நயனா சாய்

சினிமாவுக்கு வரும் வழி... நடிகை நயனா சாய்


அழகு மட்டும் அல்ல, அவள் தன்னம்பிக்கையின் அடையாளம். மாடலிங் பேஷன் ஷோவின் 'ராம்ப் வாக்கில்' இருந்து சினிமாவின் சிவப்பு கம்பளத்தை நோக்கி பயணிக்கும் இளம் நடிகை இந்த நயனா சாய். முதல் பக்கம், துணிவு, ஐந்து உணர்வுகள், பி.பி.180 திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்த பாரிஸ் கபே வெளியாகி உள்ளது. மாடலிங், சினிமா தவிர அகாடமியும் நடத்துகிறார். தன் பயணம் குறித்து நடிகை நயனா சாய் கூறியதாவது:

நான் பிறந்து வளர்ந்தது பெங்களூரு. சிறு வயதில் இருந்தே பேஷன் ஷோக்கள் அதிகம் பார்ப்பேன். ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் ஆகியோரை பார்த்து நடிகை ஆக விரும்பினேன். மாடலிங் துவங்கினேன். 2016ல் மிஸ் கிளாம் இந்தியா டைட்டில் வென்றேன்.

பேஷன் உலகில் ப்யூட்டி வித் பிரைன்ஸ் என்பர். உடலுக்கு அழகு போல் மூளைக்கும் ஒரு அழகு உள்ளது. அது நம்மை இன்னும் அழகாக்கி காட்டும்.

மாடலிங் என்னை சினிமாவுக்கு அழைத்து செல்ல பாலம் போல உதவியது. எனக்கு அங்கீகாரம் பெற்று தந்தது. நான் இதுவரை சிறிய கதாபாத்திரங்களில் தான் நடித்துள்ளேன். ஆனால் செட்டில் நடிக்கும் போது என் மனநிறைவுக்கு அளவே இல்லை. என் திறமையை உலகம் அறிய நேரம் எடுத்தாலும் அதுவரை காத்திருப்பேன். சரியான ஸ்கிரிப்ட், கதாபாத்திரம் என்னை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும்.

கன்னடத்தில் ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தேன். பின் சென்னை வந்து கூத்துப்பட்டறையில் நடிப்புக் கற்றுக் கொண்டேன். சினிமா தவிர, மாடலிங் அகாடமி துவங்கினேன். நான் மாடலாக இருக்கும் போது எனக்கு வழிகாட்ட யாருமில்லை. இதனால் இளம் தலைமுறைக்கு வழிகாட்ட இந்த அகாடமி துவங்கினேன்.

மாடலிங், சென்னை தனியாக வந்தது, பிசினஸ் என எல்லாவற்றையும் தனியாக செய்தது கடினமாக இருந்தாலும், என்னை நினைத்து பெருமையாக உள்ளது.

தற்போது நான் நடித்துள்ள பாரிஸ் கபே திரைப்படத்தில் மூன்று காதல் கதைகள் உள்ளன. பக்குவமான காதல் ஜோடி கதாபாத்திரங்களில் நடிகர்கள் குருசோமசுந்தரம், அனுமோல் ஆகியோருடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. இருவரும் சீனியர்கள். திரைக்கதையை வலுவூட்டும் நுண் நடிப்புக்களை வெளிப்படுத்துபவர்கள். அவர்களிடம் நிறைய கற்றுக் கொண்டேன். நான் இளம் காதல் ஜோடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

எதிர்காலத்தில் நடிகையாக விரும்பும் பெண்களுக்கு வழிகாட்ட விரும்புகிறேன். பாரிஸ் கபே திரைப்படத்தில் என் மாணவர்களை நடிக்க பரிந்துரைத்தேன். 10 ஆண்டுகள் கழித்து என்னை நான் வெற்றிகரமான தொழில்முனைவோராக, ஸ்டார் நடிகையாக பார்க்க விரும்புகிறேன்.

சினிமாவுக்கு வர மாடலிங் நல்ல வழி. திறமைகளை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும். நாடக நடிகராக இருந்தால் நிறைய விஷயங்களை உட்கிரகிக்க முடியும். சமூகத்தில் பெண்களுக்கு ஒவ்வொரு நேரத்திற்குள்ளும் ஒவ்வொரு விஷயங்களை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதால் கலை ஆர்வத்தை கற்பதில் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் ஜொலிக்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !